டோஸ் விட்ட முதல்வர் ஸ்டாலின்.. முதல்முறையாக சமாதானமாகிய அமைச்சர் நேரு...
திருச்சி சிவாவுடன் அமைச்சர் நேரு.
திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீட்டு அருகே நடந்த அரசு விழாவில் திருச்சி சிவாவுக்கு அழைப்பு விடுக்காமல், அழைப்பிதழில் அவரது பெயரையும் போடாமல், விழா அரங்கத்தின் கல்வெட்டிலும் அவரது பெயரை பதிக்காமல் இருந்ததால் அதிருப்தியில் இருந்தனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் திருச்சி சிவாவின் வீட்டு வழியாக அமைச்சர் நேரு விழாவுக்கு சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் நேருவின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் விழா முடிந்து அமைச்சர் நேரு காரில் ஏறி சென்ற போது அவருடன் பின்னால் வந்த அவரது ஆதரவாளர்கள் சிவாவின் வீட்டை கற்களாலும், உருட்டு கட்டைகளாலும் தாக்கினர் . இதில் சிவாவின் கார் ,பைக்குகள் கடும் சேதமடைந்தன. வீட்டின் கதவு கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் திருச்சியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையில் அமைச்சருக்கு கறுப்பு கொடி காட்டியதாக சிவாவின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வந்தனர். இதை அறிந்த நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து சிவா ஆதரவாளர்களை கடுமையாக தாக்கினர். இதை தடுக்க சென்ற காவலர்களுக்கும் கடுமையான அடிபட்டது.
இந்த சம்பவத்தால், ஆளுங்கட்சியை சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறது என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன . இது குறித்து திருச்சி சிவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, நான் இப்போது எதையும் சொல்லும் மனநிலையில் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார். முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அமைச்சர் நேருவை செல்போனில் தொடர்பு கொண்டு, ’என் நிம்மதியை ஏன் கெடுக்கிறீர்கள்?’ என்று ஆவேசப்பட்டு இருக்கிறார். அதற்கு நேரு, எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இதற்கு காரணமானவங்களை கூப்பிட்டு சத்தம் போட்டு விட்டேன். எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே இப்படி செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.
இதை அடுத்து நேருவின் ஆதரவாளர்கள் சிலர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். ஆனாலும் திமுக திருச்சி திமுகவில் பதற்றம் குறைந்தபாடில்லை . முதல்வர் இந்த விவகாரத்தை சரி செய்ய சொல்லி அமைச்சர் நேருவிடமே சொல்லி இருக்கிறார் என்றே தெரிகிறது. அதனால் தான் அமைச்சர் நேரு திருச்சி சிவாவை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து, அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார். இதை அடுத்து இந்த விவகாரம் தற்போது அமைதிக்கு வந்திருக்கிறது.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, ‘முதல்வர் என்னிடம் பேசினார். அவரது அறிவுரைப்படி சிவாவை சந்தித்தேன். எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. நல்லபடியாக நடக்கும்’ என்றார். திருச்சி சிவா நிருபர்களிடம் பேசும் போது, ‘இனி நடக்கும் விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu