தைப்பூசத்திற்கு தயாராகும் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 25ம் தேதி தைப்பூசம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். மார்கழி மாதம் முழுவதும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது.
தை மாதம் பிறந்து பொங்கல் அன்று அதிகாலை ஒரு மணிக்கும், ஜன. 16ம் தேதி காணும் பொங்கல், உழவர் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கும் கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
மார்கழி மாதம் முதல் தேதியில் தொடங்கி தைப்பொங்கல் வரையில் நாள்தோறும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதையாத்திரையாக வந்து வழிபட்டு சென்றனர். பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியதால் மக்கள் தங்கள் வழக்கமான பணிக்கு புறப்பட்டனர்.
இதையடுத்து திருச்செந்தூர் கோயிலில் வழக்கம் போல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கூட்ட நேரத்தில் முருகப்பெருமானை வழிபட முடியாத பக்தர்களும், வியாழக்கிழமை என்பதால் குரு ஸ்தலமான இங்கு குரு பகவானையும் வழிபடுவதற்காகவே பக்தர்கள் புதன் இரவிலிருந்து திருச்செந்தூருக்கு வர தொடங்கினர். பக்தர்கள் இலவச பொது தரிசன பாதையில் அதிகமாகவும், ரூ.100 சிறப்பு தரிசன பாதையில் குறைவாகவும் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அசுரரை அழிக்க சூரசம்ஹாரம் செய்வதற்காக முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவாக கொண்டாடப்படுவது தைப்பூசமாகும். இந்நாள் முருகனை வேண்டி வழிபட்டு வெற்றிகளை குவிக்கும் நாளாகவும் தைப்பூசம் போற்றப்படுகிறது. இதனால் விரதம் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் தைப்பூசத்திற்கு பழனிக்கு இணையாக திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். வரும் 25ம்தேதி வியாழக்கிழமை தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்துக்காக திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கி உள்ளனர். தைப்பூச திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கூடுதல் கழிப்பிடம், குளிக்குமிடம், வாகன வசதிகளை கோயில் நிர்வாகமும், அரசும் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu