உயிரை காப்பாத்துறவுங்களுக்கு ஓட்டுப்போடுறோம் வாங்க..!
பழனிசெட்டிபட்டி மக்கள் வைத்துள்ள பிளக்ஸ்கள்....
தேனி பழனிசெட்டிபட்டியில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களின் கவனத்திற்கு என்ற பெயரில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மக்களின் கோரிக்கைகள் என்ற பெயரில் ஊரின் முக்கிய இடங்களில் பிளக்ஸ்கள் வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பழனிசெட்டிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும். அரசு தொடக்கப்பள்ளி கட்டித்தர வேண்டும். பழனிசெட்டிபட்டியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும். பொதுமயானம் மற்றும் எரிவாயு தகன மேடை கட்டித்தர வேண்டும்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் மையத்தில் உயர் அழுத்த மின் லைன் செல்கிறது. இதனால் 1, 5, 8, 9, 10, 11, 13 ஆகிய ஏழு வார்டு மக்கள் எந்த நேரமும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் வீட்டின் மாடிகளுக்கு சென்ற பலர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தும் உள்ளனர். எனவே இந்த உயர் அழுத்த மின்லைனை வேறு வழித்தடத்தில் கொண்டு சென்று, மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வீரபாண்டி உட்கடை கிராமம் பழனிசெட்டிபட்டி சர்வே எண் 125/5, 125/17 மற்றும் பிற பகுதிகளில் குடியிருப்போருக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும். பழனிசெட்டிபட்டியில் விடுபட்ட பெண்களுக்கு மாதாந்திர மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலை புதுப்பித்து, சான்று வழங்க வேண்டும்.
பழனிசெட்டிபட்டி பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பினை உருவாக்கித்தர வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் வங்கி கடன் வழங்க வேண்டும். இளையோருக்கு பயிற்சி பெற விளையாட்டு மற்றும் பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும். இப்படிக்கு பொதுமக்களில் ஒருவன், தலைவர், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் என அச்சிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu