குப்பைமேட்டில் நெல் கொள்முதல் நிலையம், சுடுகாட்டில் அலுவலகம், தேனியில் தான் இந்த கூத்து
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் குப்பை மேட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சுடுகாட்டு கொட்டகையில் கொள்முதல் அலுவலகம் செயல்படுகிறது. இதனால் விவசாயிகள் மனம் நொந்து போய் உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் பொம்மிநாயக்கன்பட்டி ரோட்டின் ஓரத்தில் மிகப்பெரிய குப்பைக்கிடங்கு உள்ளது.
இந்த இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள்வணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இரண்டு நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டுள்ளது.
அதாவது குப்பைகளின் மீது தார்பாயினை விரித்து அதன் மீது விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை கொட்டி வைத்துள்ளனர்.
மழை பெய்தால் கொள்முதல் செய்த நெல் முழுவதும் வீணாகி விடும் என்பது தெரிந்தும் அதிகாரிகள் இவ்வளவு அலட்சியத்துடன் விவசாயிகளிடம் நெல் வாங்கி குவித்து வைத்துள்ளனர்.
இதனை விட பெரிய கொடுமை. அருகில் சுடுகாடு உள்ளது. இறந்தவர்களை அடக்கம் செய்ய உடன் வருபவர்கள் அமர இங்கு ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கொட்டகையில் தான் நெல் கொள்முதல் நிலைய அலுவலகம் செயல்படுகிறது. விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறது.
மிகவும் சிரமப்பட்டு விளைவித்த நெல்லை இவ்வளவு அலட்சியாக கொள்முதல் செய்து, சுடுகாட்டில் வைத்து பணம் தருகின்றனரே என விவசாயிகள் கடும் வேதனை தெரிவித்தனர்.
இந்த விஷயமெல்லாம் கலெக்டருக்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu