தேனியில் முதியவர்களை குறி வைக்கும் திருட்டு கும்பல்: போலீசார் எச்சரிக்கை
தேனியில் சில நாட்களாக முதியவர்களை குறி வைத்து ஒரு கும்பல் திருடி வருகிறது. முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தேனி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இதில் மனு கொடுக்க பல முதியவர்கள், மூதாட்டிகள் வருவார்கள். ஒரு நபர், இவர்களை அணுகி மனு எழுதி தருவது போலவும், அவர்களை அழைத்துச் சென்று மனு கொடுப்பது போலவும் நடித்து, தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் வைத்திருக்கும் பணம், விலை உயர்ந்த சில பொருட்களை திருடிச் சென்று விடுவார். இந்த நபரை கண்காணித்த ஒரு போலீஸ்காரரே அவரை கையும், களவுமாக பிடித்து தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷிடம் ஒப்படைத்தார். அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சில கடைகளில் முதியவர்கள், பெண்கள் இருக்கும் போது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத மதிய இடைவேளையில், ஒரு கும்பல் அந்த கடைக்கு சென்று பேச்சு கொடுத்து நடிகர் வடிவேல் காமெடி பாணியில் பொருள், பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுகின்றனர்.
சிலர், நடந்து செல்லும் முதியவர்களின் அருகே சென்று அவர்களை வாருங்கள் உங்களை செல்லும் வழியில் இறக்கி விடுகிறேன் எனக்கூறி டூ வீலரில் ஏற்றிச் சென்று, ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் பணம், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்று விடுகின்றனர். சில இடங்களில் பெண்களும் இது போன்ற சிக்கல்களில் சிக்கி விடுகின்றனர். எனவே முதியவர்கள், பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu