அடம்பிடிக்கும் அரிக்கொம்பன்.. பிடிப்பதை தவிர வேறு வழியில்லை
மேகமலையில் அரிக்கொம்பன் யானை.(பைல் படம்)
அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டத்திற்குள் வந்து சுமார் இரண்டு மாதத்தை நெருங்கி வி்ட்டது. கேரளாவில் தான் வாழும் இடத்தில் அரிசியையும், ஜீனியையும் சாப்பிட்டு பழகிய அரிக்கொம்பன் யானை இங்கும் அரிசி, ஜீனியை தேடி குடியிருப்புகளை நோக்கியே வருகிறது. வனத்திற்குள் செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கிறது. ஊருக்குள் வரும் யானையிடம் இருந்து மக்களை பாதுகாக்க முடியாமல் வனத்துறை பாடாய் படுத்துகிறது. மேகமலை வனப்பகுதியில் உள்ள ஏழு கிராம மக்களும் இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
திடீரென கம்பத்திற்குள் புகுந்த யானை அதனை சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது. வனத்துறை அந்த யானையை வனத்தை நோக்கி துரத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டது. இந்த முயற்சியில் அரிக்கொம்பனுக்கு காயமும் ஏற்பட்டு விட்டது. தவிர ஒரு கண்ணில் பார்வையிழப்பும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுடன் யானை தடுமாறி வருகிறது. இருப்பினும் அரிசி, ஜீனியை தேடி ஊருக்குள் வருகிறது. ஊருக்குள் வரும் போது எதிரில் வருபவர்களை அடித்துக் கொன்று விடுகிறது.
இதனால் வனத்துறை மக்களை பாதுகாக்க 24 மணி நேரமும் யானையை தொடர்கின்றனர். தற்போது யானை சின்னமனுார் ஒன்றியம் எரசக்கநாயக்கனுார் காப்பு வனப்பகுதிக்குள் தான் உள்ளது. ஆனால் மிகவும் அருகில் பல கிராமங்கள் உள்ளன. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதாவது காமயகவுண்டன்பட்டி, கூடலுார், கம்பம், புதுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் விவசாய பணிகளுக்கு செல்ல முடியவில்லை. சுருளிஅருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியவில்லை.
இவ்வளவு பிரச்னைகள் தொடர்வதால் யானையினை பிடித்து அகற்றுவதை தவிர வேறு வழியில்லை என்பதில் தேனி மாவட்ட நிர்வாகம் தெளிவான முடிவுக்கு வந்துள்ளது. இன்று அல்லது நாளைக்குள் யானை பிடிப்பட்டு விடும். யானை தட கண்காணிப்பாளர்கள், கால்நடை மயக்கவியல் மருத்துவர்கள், கும்கி யானைகள் என தேவையான அத்தனை ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. யானையை பிடித்து எங்கு கொண்டு போய் விடுவது என்பதெல்லாம் முடிவாகி விட்டாலும், யானையை பிடித்த பின்னரே அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என வனத்துறையினர் தெளிவாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu