நான்காவது முறையாக தேசியப் போட்டிக்கு தயாராகும் தேனி ஹாக்கி அணி..
மாணவர்களுக்கு இலவச ஹாக்கி பயற்சி அளிக்கும் வழக்கறிஞர் செல்வம்.
தேனியில் உள்ளது வின்சன் ஹாக்கி கிளப். இதன் செயலாளராக வழக்கறிஞர் செல்வம் உள்ளார் இவர், பல ஆண்டுகளாக வின்சன் ஹாக்கி கிளப் மூலம் வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் இந்த பயிற்சிகள் நடந்து வருகிறது. வழக்கறிஞர் செல்வத்தின் முயற்சிகளுக்கு அவரது நண்பர்களும், பல தொழில் அதிபர்களும் உடன் இருந்து ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது 14 வயது, 17 வயது, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில் 70 பேர் ஹாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர். 30 பேர் தினமும் தடகள பயிற்சியும் பெற்று வருகின்றனர். ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கமுமு், காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி பதக்கமும் பெற்ற திருவண்ணாமலையை சேர்ந்த பயிற்சியாளர் குடில் அரசன் தடகள பயிற்சிகள் அளித்து வருகிறார்.
இங்கு பயிற்சி பெறும் மாணவர்களில் 95 சதவீதம் பேர் மிகவும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க கூட பணம் இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக, ஒரு ஹாக்கி ஸ்டிக்கின் விலை 3000 ரூபாய். ஷூ விலை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.
காலில் அணியும் ஷின் பேடு விலை 600 ரூபாய். குறைந்த பட்சம் நான்கு செட் விளையாட்டு உடைகள் தேவைப்படும். அதாவது நான்கு பனியன், நான்கு ஷார்ட்ஸ் வரை தேவைப்படும். ஆக மொத்தம் விளையாட்டு பயிற்சி பெற ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை ஆகும்.
இது தவிர தினசரி பயிற்சியின் போது, ஆரோக்கியமான உணவுகள், பானங்கள் தேவைப்படும். ஏழை மாணவர்களால் இதெல்லாம் சாத்தியம் ஆகாது. எனவே, வழக்கறிஞர் செல்வம் தனது நண்பர்கள், தான் பழகிய தொழில் அதிபர்களிடம் ஸ்பான்சர்கள் வாங்கி இந்த உபகரணங்களின் தேவையை பூர்த்தி செய்கிறார்.
இதற்கே ஆண்டு தோறும் பல லட்சம் செலவு ஆகும். இவ்வளவு பணத்தையும் கொடுக்க தேனியில் ஸ்பான்சர்கள் உள்ளனர் என்பது சிறப்பான விஷயம். தற்போது இங்கிருந்து ஒரு ஹாக்கி அணி மாநில அளவிலான போட்டிக்கு விளையாட செல்கிறது. இதற்கான ஒட்டுமொத்த செலவையும் பெயர் வெளியிட விரும்பாத தொழிலதிபர் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதுவரை தேனி ஹாக்கி அணி மூன்று முறை தேசிய போட்டிகளில் பங்கேற்று உள்ளது. இப்போது நான்காவது முறையாக தேசிய போட்டிகளுக்கு செல்கிறது.
இதுவரை பாரா ஒலிம்பிக்கின் உச்சபட்ச சாதனை ஈட்டி எறிதலில் 56 மீட்டர் துாரம். இங்கு பயிற்சி பெறும் சேது என்ற மாற்றுத்திறனாளி பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். இவர், தற்போது ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ள துாரம் 57 மீட்டர். இந்த சாதனையை இந்தியாவில் யாரும் இதுவரை செய்யவில்லை. இன்னும் இவரது திறனை உயர்த்தும் பயிற்சிகள் நடந்து வருகின்றன. எனவே வரும் பாராஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தங்கப்பதக்கம் வாங்க உள்ளார் என பயிற்சியாளர்கள் அத்தனை பேரும் உறுதியாக கூறி வருகின்றனர்.
இங்கு பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களில் பலர் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தேர்வாகி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரியலுார், மதுரை மாவட்டங்களில் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். ஒருவர் மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் படித்து வருகிறார். 10 பேர் திருப்பத்துார் துாய நெஞ்சம் கல்லுாரியில் படித்து வருகின்றனர். இந்த விளையாட்டு வீரர்கள் விரைவில் மாநில மற்றும் தேசிய அளவில் சாதனை படைக்க உள்ளனர் என வழக்கறிஞர் செல்வம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu