தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா தொடங்கியது

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா தொடங்கியது
X

வீரபாண்டி முல்லை பெரியாற்றில் தீர்த்தம் எடுக்க குவிந்திருக்கும் பக்தர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில்விழா தொடங்கியது

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா தான் மிகப்பெரிய திருவிழா ஆகும். இந்த விழாவினை தேனி மாவட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து கொண்டாடுவார்கள். அதேபோல் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, துாத்துக்குடி மாவட்ட மக்களும் பங்கேற்பார்கள்.

இரண்டு ஆண்டுகள் கொரோனா பேரிடர் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த 21 நாட்களுக்கு முன்னர் கம்பம் நடவு செய்து விழா தொடங்கியதற்கான அறிவிப்பு வெளியானது. அப்போது இருந்தே பக்தர்கள் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர். இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கின. வரும் மே 17ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை விழா நடைபெறுகிறது.

விழா திடல் மட்டும் 4 கி.மீ., நீளம் இருக்கும். இரண்டு தற்காலிக பஸ்ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் கடைகள், ராட்டினங்கள் என பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் இடைவிடாமல் நடைபெறும். பக்தர்களும் 24 மணி நேரமும் இடைவிடாமல் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் முல்லைப்பெரியாற்றில் இறங்கி தீர்த்தம் தெளிப்பார்கள், பலர் நீராடுவார்கள். ஆற்றில் தண்ணீர் எடுத்து வந்து கோயிலுக்குள் உள்ள கம்பத்தில் ஊற்றுவார்கள். பின்னர் வழிபாடு செய்வார்கள். அக்னிசட்டி நேர்த்திக்கடன், ஆயிரம் கண்பானை நேர்த்திக்கடன், மாவிளக்கு, சேற்றாண்டி வேடம் அணிதல் உட்பட பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்துவார்கள். விழா திடலில் ஏழு நாட்களும் இடைவிடாமல் கிடா வெட்டி அன்னதானம் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஒரு நாளைக்கு 3000க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்களை வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

இப்படி பரபரப்பாக நடைபெறும் இந்த விழா இன்று காலை தொடங்கியது. இனி வரும் ஏழு நாட்களும் தேனியும், வீரபாண்டியும் (இடையில் 9 கி.மீ.,) பக்தர்கள் நெரிசலால் பொங்கி வழியும். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக கூட்டம் வருவதால், 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம். அதேபோல் 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இடைவிடாமல் துப்புரவுப்பணி மேற்கொள்வார்கள். குடிநீர் வசதி, மருத்துவ முதல் உதவி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட கண்காணிப்புக்கேமராக்கள் பொறுத்தப்பட்டு விழா நிகழ்ச்சிகள் விழா திடல் முழுவதையும் போலீஸ் நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது