தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை: வீட்டு உரிமையாளர்கள் 'கண்டிஷன்'

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் 'என் வீட்டில் வேலைக்கு வர வேண்டாம். ஊசி போட்டதற்கான மொபைல் மெசேஜ், அல்லது சர்டிபிகேட்' கொடுத்தால் மட்டுமே வீட்டில் வேலை செய்ய அனுமதிப்போம் என தேனியில் பலர் புதிய நடைமுறையினை அமல்படுத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு வெகுவாக மக்களிடம் உருவாகி விட்டது. இப்போது கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் கூட்ட நெரிசல் நிரம்பி வழிகிறது. இதனால் பலர் இன்னமும் முதல் டோஸ் ஊசியே போட முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் தேனியில் உள்ள வீட்டின் உ ரிமையாளர்கள் பலர், 'கொரோனா தடுப்பூசி போடாவிட்டால், என் வீட்டில் வேலைக்கு வர வேண்டாம்' என தங்கள் வீட்டு பணியாளர்களிடம் கூறி அனுப்பி விட்டனர். சிலர் இரண்டு டோஸ் போட்ட சான்று கொடுத்தால் மட்டுமே வேலைக்கு அனுமதிப்போம். அதுவரை எங்கள் வீடுகளில் உள்ள வேலைகளை நாங்களே செய்து கொள்கிறோம். நீங்கள் ஊசி போட்ட பின்னர் வேலைக்கு வாருங்கள் என கூறி அனுப்பி விட்டனர்.
இதனால் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் தேனியில் வேலையிழந்து உள்ளனர். கொரோனா லாக்டவுன் முடிந்து பல நாட்களை கடந்த பின்னரும் இவர்களின் வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. தேனியில் வீட்டு வேலை செய்பவர்கள் சங்கமே வைத்துள்ளனர். தங்கள் சங்கத்தின் மூலம் உயர் அதிகாரிகள் பலருக்கும் மனு கொடுத்தும் பார்த்தனர். ஆனாலும் அதிகாரிகள் 'அவர்களின் குடும்ப பாதுகாப்பிற்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட முடியாது. உங்களுக்கு சம்பள பாக்கி இருந்தால் சொல்லுங்கள் வாங்கித்தருகிறோம். கொரோனா தடுப்பூசி போடுவது உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பு தானே. அவர்கள் சொல்வதில் என்ன தவறு உள்ளது' என கூறி விட்டனர்.
ஆனால் தினமும் ஒவ்வொரு இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு சங்கம், அமைப்பு, தெரு, என பல்வேறு குழுக்கள் தங்களுக்குள் இணைந்து தங்கள் பகுதியில் சுகாதாரத்துறையினை அழைத்து தடுப்பூசி முகாம் நடத்துகின்றனர். இந்த முகாம்களில் எங்களை போன்றவர்களுக்கு போட அனுமதியில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும் என அறியாமையில் இவர்கள் புலம்புவதை பார்த்தால் வேதனையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu