தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
தேனி போக்குவரத்து நெரிசல் போட்டோ. இடம்: பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் அருகே
தேனியில் மதுரை ரோட்டில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு வருடங்களை கடந்தும் இன்னும் 10 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை. (குறிப்பு: சில நேரங்களில் வளர்ச்சி பணிகளின் திட்ட மதிப்பீட்டை உயர்த்தி அதிக பணம் வாங்க வேண்டும் என்பதற்காக பணிகளை மெதுவாக செய்வார்கள். அதிக கமிஷன் கிடைக்கும் என்பதற்காக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதற்கு உடன்படுவார்கள். இது வழக்கமாக நடக்கும் விஷயம். இந்த ரயில்வே மேம்பால பணிகள் எதற்கு தாமதம் என்பது தெரியவில்லை. ஆனால் தாமதமாக நடக்கிறது).
இதனால் தேனி பொதுமக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். அதுவும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் (தற்போது தகுதியை பார்த்து மாவட்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. சீனியரிட்டியும், பணமும் இருந்தால் யாரும் எந்த பதவிக்கும் வரலாம்) தங்களின் அதிகாரத்தை காட்ட போக்குவரத்தை அங்கும் இங்கும் மாற்றி... பஸ்களை அப்படி நிறுத்து... இப்படி நிறுத்து என பல்வேறு குழப்பங்கள் செய்கின்றனர்.
இதனால் தேனி மதுரை ரோடு கிட்டத்தட்ட நொறுங்கித்தான் கிடக்கிறது. குறிப்பாக அரண்மனைப்புதுார் சந்திப்பு அருகே பயணிப்பவர்கள் சகதிக்குள் தான் ஸ்கேட்டிங் செல்ல வேண்டும். அண்ணாமலையே தட்டிக்கேட்க முடியாத நிலையில், பொதுமக்கள் எப்படி தட்டிக்கேட்க முடியும்?
இந்த நிலையில், ஒரு டெல்லி அதிகாரி தேனிக்கு வந்துள்ளார். அந்த அதிகாரிக்கு தேனிதான் மாமனார் ஊர். அதாவது தேனி மாவட்டத்தில் திருமணம் முடித்துள்ளார். டெல்லியில் பெரிய பொறுப்பில் இருப்பதால் எப்போதாவது தேனி வருவார். இப்போது வந்து சிக்கிக் கொண்டார். சில நொடிகள்... நிமிடங்களாகி... மணிகளையும் கடந்து விட்டது.
ஆக இந்த நெரிசலில் சிக்கியதால் டெல்லி விமானத்தை விட்டு விட்டார். தேனி நெரிசலில் சிக்கி கொந்தளித்த அந்த அதிகாரி... இந்த சிக்கல்கள்... பிரச்னைகள் குறித்து தேனி மாவட்ட அதிகாரிகள் மட்டுமின்றி... மத்திய மாநில அதிகாரிகளுக்கும் மெயில் அனுப்பி, ‘இந்தியாவிலேயே தேனியில் உள்ளது போல் மோசமான போக்குவரத்து நெரிசல் பிரச்னையை நான் சந்தித்தில்லை’ என போட்டுத்தள்ளி விட்டார்.
அதன் பின்னர் சுதாரித்த அதிகாரிகள் திடீரென சுறுசுறுப்பாகி போக்குவரத்து நெரிசலை சரி செய்கிறேன் என குழப்பம் செய்து... தற்போது ஒரு வழியாக ஏதோ தற்காலிக ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி அடிக்கடி அதிகாரிகள் வந்து இங்குள்ளவர்களை வறுத்தெடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் போலத் தெரிகிறது என பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுசரி போக்குவரத்து சரியாகிருச்சா... அப்படியெல்லாம் கேட்காதீங்க...? அதற்கு இன்னும் சில மாதங்கள்... இல்லையில்லை... வருஷங்களாகும்....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu