தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய வேண்டியவை...
தேனி நேருசிலை சந்திப்பு.
தேனியில் நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோடு திறக்கப்பட்டுள்ளதால், தேனி நகருக்குள் வர அவசியமில்லாத வாகனங்கள் பைபாஸ் ரோடு வழியாக கடந்து சென்று விடுகின்றன. இதன் மூலம் நகருக்குள் நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது. ஆனால் இன்னமும் தேனி நகருக்குள் நெரிசல் முழுமையாக குறையாத நிலை உள்ளன.
தேனியில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தற்போது முடங்கி கிடக்கும் பைபாஸ் ரோடு பணிகளை முழுமையாக முடித்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
தேனி நகருக்குள் முழுமையாக போக்குவரத்து நெரிசல் குறைய பல வேலைகளை செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக காலை, மாலை பள்ளி விடும் நேரங்கள், தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் நேரங்களில் தேனி நெரிசலில் திணறித்தான் போகிறது.
தற்போது, மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் மதுரையில் இருந்து வரும் பஸ்களை ஐ.டி.ஐ., ரோடு வழியாக புதிய பஸ்ஸ்டாண்டிற்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைவில் தொடங்க உள்ளது.
அதேபோல், பாரஸ்ட் ரோட்டிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அருகே நெரிசல் அதிகம் உள்ளது. காரணம் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், அவர்கள் வரும் பஸ்கள், அதேபோல் தொழிலாளர்கள் வரும் வாகனங்கள் என நெரிசல் பெரும் பிரச்சினையாகவே இன்னமும் உள்ளது.
இந்த சிக்கலுக்கு தீர்வு காண, பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அருகே உள்ள பெத்தாட்ஷி விநாயகர் கோயிலை ஒட்டி உள்ள தெருவை நான்கு வழிச்சாலை பைபாஸ் உடன் இணைக்க வேண்டும். இதனால் பெரியகுளத்தில் இருந்து பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம் வழியாக தேனிக்குள் வரும் வாகனங்கள், பைபாஸ் ரோட்டின் வழியாக வந்து தேனிக்குள் நுழையும் வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாக சென்று விடும்.
அதேபோல், பழைய ஸ்ரீராம் தியேட்டர் வழியாக அரண்மனைபுதுார் ரோட்டை இணைக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழக்கு நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, வழக்கினை நல்லபடியாக முடித்து ரோட்டை இணைத்தால் நல்லது என நாங்கள் பரிந்துரைத்து உள்ளோம்.
இந்த வழக்கில் கவனம் செலுத்துமாறு நகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும் என எங்கள் உயர் அதிகாரிகளிடமும் வலியுறுத்தி உள்ளோம். அதேபோல் அல்லிநகரம் பொம்மைகவுண்டன்பட்டியில் இருந்து தேனி புதிய பஸ்ஸ்டாண்டிற்கு செல்லும் பைபாஸ் ரோட்டையும் இணைக்க வேண்டும்.
பங்களாமேட்டில் இருந்து பாரஸ்ட் ரோடு, என்.ஆர்.டி., நகர், சமதர்மபுரம், பழைய அரசு மருத்துவமனை வழியாக குறிஞ்சி நகர் வந்து கக்கன்ஜி காலனி, வழியாக வரும் ரோட்டையும் புதிய பஸ்ஸ்டாண்ட் பைபாஸ் வழியாக இணைக்க வேண்டும். இந்த பணிகளும் முடிந்து விட்டால் தேனி நகரம் பெரும் அளவில் நெரிசலில் இருந்து விடுபட்டு விடும். அதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu