தேனியின் துயரம்: 6 அடியான 60 அடி 'ராஜவாய்க்கால்'
ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிப்போன தேனி ராஜவாய்க்கால்
Today Theni News -தேனியில் கொட்டகுடி ஆற்றில் இருந்து பிரிந்து நகரின் வழியாக ஓடும் தேனி ராஜ வாய்க்கால், பழைய பேருந்து நிலையத்தில் ஊடுருவி, மதுரை சாலையை ஒட்டி சென்று, கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள குளத்தில் சேருகிறது.
ராஜவாய்க்கால். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் சுத்தமான தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த வாய்க்காலில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் பயன்படுத்தினர். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜவாய்க்கால் தண்ணீர் தான் தேனி மக்களின் குடிநீராக இருந்தது. அந்த அளவு சிறப்பு பெற்ற இந்த ராஜவாய்க்கால் 60 அடி அகலத்துடன் இருந்துள்ளது.
படிப்படியாக இந்த அகலம் குறைந்து, அதாவது ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி தற்போது 6 அடியாக மாறிப்போனது. அந்த 6 அடி வாய்க்காலும், கழிவுநீர் செல்ல வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் விட்டு வைத்துள்ளனர். இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பில் அத்தனை கட்சிக்காரர்கள், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அத்தனை பேரும் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த வாய்க்காலை மீட்க வேண்டுமானால், பல ஆயிரம் கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும். இந்த கட்டடங்கள் எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்த நபர்களிடம் உள்ளது. இதனால் இடித்து அகற்றுவது எல்லாம் சாத்தியமில்லாத வேலை. துார்வாரி பராமரிக்கலாம் என்றாலும் வழியில்லை.
இப்போது சாக்கடை நீர் மட்டும் இந்த வாய்க்காலி்ல் செல்கிறது. இந்த வாய்க்கால் முகப்பு பகுதியில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. வாய்க்கால் முழுக்க புதர் மண்டிக்கிடக்கிறது. பல நுாறு இல்லை... இல்லை...பல ஆயிரம் பாம்புகள் உள்ளே உள்ளன.
தேனியில் மழை பெய்யும் போது கழிவுநீர் இந்த வாய்க்கால் வழியாகத்தான் செல்லும். இப்போது இந்த வாய்க்காலில் புதர் மண்டிக்கிடப்பதால், வாய்க்காலுக்குள் தண்ணீர் செல்ல வழியின்றி நகர் பகுதி முழுவதும் தேங்கி நிற்கிறது. இப்படி தேங்கும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. தண்ணீர் மட்டுமா? கழிவுகள், சகதி, பாம்புகள் கூட குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.
இந்த வாய்க்காலை துார்வார வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி வலியுறுத்துபவர்களில் பலரும் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளனர் என்பதும் உண்மை. இந்து எழுச்சி முன்னணியும், இந்த வாய்க்காலை துார்வார வேண்டும். அப்போது தான் தேனி நகருக்குள் தண்ணீர் தேங்காமல் கடந்து செல்லும். நகரின் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படும் என மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளது.
இந்த மனு கொடுப்பதால் எந்த பலனும் இல்லை என்பது கொடுப்பவருக்கும் தெரியும், வாங்குபவருக்கும் தெரியும். எனவே ராஜவாய்க்காலை ஒட்டி வாழ்பவர்கள் இணைந்தாவது இந்த துார்வாரும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பட்டு வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu