தேனிக்கு ரயில்வே மேம்பாலம் அவசியம்: கேட் மூடப்பட்டால் ஆம்புலன்ஸ்க்கு சிக்கல்
தேனியில் மதுரை ரோட்டில் அரண்மனைப்புதுார் விலக்கு அருகே ரயில்வே மேம்பாலம் அவசியம் கட்ட வேண்டும். கேட் மூடப்பட்டால் ஆம்புலன்ஸ்கள் கூட சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. மாவட்ட போலீஸ் நிர்வாகமும் நெரிசலுக்கு தீர்வு காண இங்கு மேம்பாலம் அவசியம் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தின் தொன்னுாறு சதவீத நிலப்பரப்பில் வசிக்கும் மக்களும், இடுக்கி மாவட்ட மக்களும் தேனிக்கு வந்தால் மதுரை ரோட்டை பயன்படுத்தியே ஆக வேண்டும். அந்த அளவு தேனி மாவட்டத்தின் இயற்கையான நிலப்பரப்பு அமைந்துள்ளது. அதுவும் மதுரை ரோடு அமைந்துள்ள பகுதியிலேயே பழைய பஸ்ஸ்டாண்ட், புதிய பஸ்ஸ்டாண்ட், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. இதனால் மதுரை ரோடு எந்த நேரமும் நெரிசலில் சிக்கி தவிக்கும். அடிக்கடி ஆம்புலன்களும் தேனியை கடந்து மதுரை ரோடு வழியாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நோக்கி செல்லும். மதுரை- போடி அகல ரயில்பாதை தேனி நகருக்கு மத்தியில் செல்கிறது.
இந்த பாதை அரண்மனைப்புதுார் விலக்கு அருகே மதுரை ரோட்டை கடக்கிறது. அடுத்து பங்களாமேடு, பெரியகுளம் ரோட்டில் பெத்தாட்ஷி விநாயகர் கோயில் அருகே கடந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும். இதில் பங்களா மேடு, பெரியகுளம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தாலும் ரயில்வே மேம்பாலம் தேவைப்படாது. காரணம் இந்த இரு கேட்கள் மூடப்பட்டாலும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் கடந்து செல்ல மாற்றுப்பாதை வசதிகள் உள்ளன. குறிப்பாக பெரியகுளம் பகுதியில் இருந்து வரும் ஆம்புலன்ஸ்கள் ரயில்வே லைனை தொடாமலேயே மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல முடியும். ஆனால் போடி கம்பம் பகுதிகளில் இருந்து மதுரை ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் கட்டாயம் ரயில்வே லைனை கடந்தாக வேண்டும். ரயில்வே கேட் மூடப்பட்டால் இந்த வாகனங்களுக்கு மாற்றுப்பாதை வசதிகள் இல்லை. கேட் திறக்கப்படும் வரை காத்திருந்தே ஆக வேண்டும்.
மற்ற போக்குவரத்து வாகனங்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் கேட் மூடப்படும் நேரம் ஆம்புலன்ஸ் மாட்டிக் கொண்டால், அதில் வரும் நோயாளிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு விடும். இந்த சிக்கலை தவிர்க்க மதுரை ரோடு ரயில்வே கேட்டில் மேம்பாலம் உடனடியாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும், கட்டாயம் பாலம் கட்ட வேண்டும் என தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகமும் வலியுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu