தேனி நகராட்சி 29வது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளராக ஆசிரியை போட்டி
தேனி 29வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் ஷீலா.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 29வது வார்டு வேட்பாளராக களம் இறங்குபவர் பி.ஷீலா. இவர் தேனி தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளி நிர்வாகம் ஒரு மாதம் விடுப்பு வழங்கி உள்ளதால், கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கியுள்ளார்.
வேட்பாளர் ஷீலா கூறுகையில், நான் அ.தி.மு.க., வேட்பாளர் தான். ஆனால் வெற்றி பெற்றவுடன் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்காவும் உழைப்பேன். ஜாதி, மத வேறுபாடுகளை களைய பாடுபடுவேன். எனது வார்டு தேனி நகரின் இருதய பகுதி ஆகும். ஆமாம் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த வணிக மற்றும் குடியிருப்புகள் அமைந்த பகுதி. இங்கு செய்ய வேண்டிய செயல்கள் பல ஆயிரம் உள்ளது.
பெண்கள் திருமண உதவி திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் காப்பகம், பிறப்பு சான்று, இறப்பு சான்று வழங்கல், பெயர் திருத்தம் செய்தல், முதியோர் விதவை, முதிர்கன்னி உதவி திட்டம் பெற்று தருதல், ஊனமுற்றோர் கைவிடப்பட்டோர் உதவி என 21 அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தர தனி அலுவலகம் அமைக்க உள்ளேன்.
குடிநீர், சுகாதாரம், துப்புரவு பணிகளை முடுக்கி விட்டு, பெரு நகரங்களுக்கு ஈடான வசதிகளை பெற்றுத்தருவேன். காரணம் தேனிக்குள் வரும் மக்கள் எனது வார்டுக்குள் நுழையாமல் வெளியே செல்ல முடியாது. அப்படி மிகுந்த போக்குவரத்து, வணிகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் எனது வார்டில் வருகிறது. எனவே செய்ய வேண்டிய வேலைகள் பல ஆயிரம் உள்ளன. இத்தனையும் செய்வேன் என சொல்ல முடியும். தனித்தனியாக எழுதினால் இப்போது சாத்தியமாகுமா? பேசுவதை விட செய்வதே சிறந்தது.
எனது கணவர் ஸ்ரீதர் கட்சியிலும், பொதுப்பணியிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அவரது சமூக தொடர்புகள் மிக, மிக அதிகம். அவருக்கு கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் பெருமளவில் தொடர்புகள் உள்ளன. இதனால் நாங்கள் எங்கள் பகுதிக்கு என்ன தேவையோ அதனை தடையின்றி செய்ய முடியும்.
மக்கள் ஆதரவு எங்களுக்கு பெருமளவு உள்ளது. எனது பிரச்சாரத்தை ஒருமுறை நேரில் பார்த்தாலே எளிதில் வெற்றி பெறுவேன் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். மக்கள் என்னை நம்புகின்றனர். நான் மக்களுக்கு தேவையானதை செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu