தேனி முதுவாக்குடி முறைகேடு? கலெக்டர் 24 மணி நேரம் கெடு

தேனி முதுவாக்குடி முறைகேடு? கலெக்டர் 24 மணி நேரம் கெடு
X

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு முதுவாக்குடி ஆதிவாசி, பழங்குடியின மக்களுடன் பெரியார் வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர்கள். 

தேனி முதுவாக்குடி பழங்குடியின மலைவாழ் மக்களிடம் பறித்த ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க கலெக்டர் 24 மணி நேரம் கெடு கொடுத்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குரங்கனியை அடுத்துள்ள மலைக்கிராமம் முதுவாக்குடி. இங்கு ஆதிவாசி, பழங்குடியின மக்கள் பல நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இங்கு ரோடு சீரமைக்க மட்டும் என தேனி ஊரக வளர்ச்சி முகமை 10 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. உண்மையில் இதற்கு ஒரு லட்சம் கூட ஆகாது. ஆமாம், ரோட்டில் இருந்த களைகளை மட்டுமே அகற்றி உள்ளனர். இருபுறமும் தண்ணீர் வழிந்தோட கால்வாய் கூட அமைக்கப்படவில்லை. மலைப்பகுதி ரோடுகளில் இந்த கால்வாய் அமைக்கப்பட வேண்டும். இப்படி ஒரு முறைகேடு நடந்துள்ள நிலையில், இங்கு புதிதாக தார்ரோடு அமைக்க தி்ட்டமிட்டு வருகின்றனர். ரோடு அமைப்பது மிகுந்த வரவேற்புக்குரிய விஷயம் என்றாலும், அதில் எத்தனை கோடி கபளீகரம் ஆகப்போகிறதோ தெரியவில்லை.

இந்நிலையில் முதுவாக்குடி மக்களுக்கு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இன்னமும் வீடுகள் கட்டப்படவில்லை. இந்த ஊராட்சியின் துணைத்தலைவரின் கணவர், இந்த முதுவாக்குடி மக்களின் ஏ.டி.எம்., வங்கி பாஸ்புக் போன்றவைகளை பறித்துக் கொண்டார். பணம் அவர்கள் அக்கவுண்டில் ஏறியதும் அவர் எடுத்துக் கொள்வார். ஆனால் வீடு கட்டித்தரவில்லை. தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் பேஸ்மட்டம் முடிந்துள்ளது. இந்த பேஸ் மட்டத்திற்கு தேவையான கல், மணல் கூட இங்குள்ள முதுவாக்குடி மக்களே சேகரித்து கொடுத்துள்ளனர். இப்படி முதுவாக்குடி ஆதிவாசி, பழங்குடியின மக்களை ஓரு சிலர் பாடாய்படுத்தி, பணம் பறிப்பதை கண்ட முல்லைப்பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அன்வர்பாலசிங்கம், தாமஸ் தலைமையிலான குழுவினர் முதுவாக்குடிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் ஆதிவாசி மக்களை அழைத்துக் கொண்டு இன்று கலெக்டர் முரளீதரனை சந்தித்து முறையிட்டனர். டென்சன் ஆன கலெக்டர் முதுவாக்குடி மக்களிடம் பறித்த ஏ.டி.எம்., கார்டுகளையும், பாஸ்புக்கையும் உடனடியாக திருப்பி தராவிட்டால், அதாவது 24 மணி நேரத்திற்குள் தராவிட்டால், அதனை பறித்து வைத்துள்ள நபரை கைது செய்ய போலீஸ் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளார். முதுவாக்குடியில் நடைபெற்ற இதர ஊழல்களை பற்றியும், மனித உரிமை மீறல்கள் பற்றியும் விசாரணை நடத்தவும் கலெக்டர் ஒப்புக் கொண்டுள்ளார் என முதுவாக்குடி மக்களும், ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், தாமஸ் தெரிவித்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!