ஒரு ஏக்கர் கதிர் ரூ.35 ஆயிரம் ரூபாய்: மக்காச்சோள விவசாயிகளுக்கு ஜாக்பாட்
மக்காச்சோளம் (கோப்பு படம்)
திருச்சி வியாபாரிகள் தேனி மாவட்டத்திற்கு வந்து ஒரு ஏக்கர் பரப்பில் விளைந்துள்ள மக்காச்சோள கதிர்களை 35 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து, அவர்களே அறுவடை செய்து எடுத்துச் செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி நடைபெறுகிறது. முழுமையாக விளைந்த மக்காச்சோளத்தை மாட்டுத்தீவனம், சத்துமாவு தயாரிக்கும் கம்பெனிகள், பி்ஸ்கெட் கம்பெனிகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு நல்ல வருவாய் கிடைக்கிறது.
இது குறித்து தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது திருச்சி மார்க்கெட்டில் இருந்து தேனி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள வியாபாரிகள் 60 நாள் முதல் 70 நாட்களுக்கு உட்பட்ட மக்காச்சோள கதிர்களை, அவர்களே ஆள் வைத்து அறுவடை செய்து ஏற்றிச் செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர்.
மக்காச்சோளத்தை முழுமையாக விளைவித்து, அறுவடை செய்து, உலர்த்தி பிரித்தெடுத்து சுத்தப்படுத்தி விற்றாலே ஒரு ஏக்கருக்கு இந்த அளவு தான் பணம் தேறும். ஆனால் நடவு செய்த 60 முதல் 70 நாளில் விவசாயிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் கையில் கொடுத்து விட்டு அவர்களே அறுத்து எடுத்துக் கொள்கின்றனர். பசுந்தட்டைகளை விவசாயிகள் அறுவடை செய்து விற்று அதில் தனி வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.
இதனால் இந்த ஆண்டு மக்காச்சோள விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. திருச்சி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்படும் மக்காச்சோள கதிர்கள் இனிப்பு சோளமாக சாப்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu