தலைமையின் அறிவிப்பை மீறியது ஏன்? தேனி தி.மு.க.வினர் தன்னிலை விளக்கம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் போது முன்மொழிய காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மட்டுமே இருந்தார். வழிமொழிய திமுகவினர் யாரும் முன்வரவில்லை. மேலும் திமுகவின் சார்பில் 10-ஆவது வார்டு கவுன்சிலர் ரேணுபிரியா தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.
கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை திமுகவினர் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைமையின் அறிவிப்பை திமுகவினர் ஏன் கடைப்பிடிக்கவில்லை என்பது குறித்து திமுகவினர் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து கட்சியினர் கூறியதாவது:
தேனி நகராட்சிக்கு தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன். இவர் அ.தி.மு.க., எதிர்கட்சியாக இருந்த போது இருந்தே நகர செயலாளராக இருந்து கட்சியை காப்பாற்றவும், பலப்படுத்தவும் பல கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்காக பல கோடி ரூபாய் கடன் பட்டுள்ளார் என்பதும் தேனி நகரம் முழுக்கவே தெரியும்.
தவிர இவரது மனைவி ரேணுப்பிரியாவிற்கு தலைவர் பதவி உறுதி செய்த பின்னரே அவர், வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்து தேனியில் போட்டியிட்டார். தி.மு.க., கூட்டணிக்கு 21 பேரை வெற்றி பெற வைக்க பல கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்.
இந்நிலையில் எந்த சீனுக்கும் வராத காங்., இரண்டு இடங்களை மட்டுமே பெற்று தலைவர் பதவியை கேட்பது நியாயம் இல்லை. தவிர காங்., வேட்பாளர் சற்குணத்தின் மகன் டாக்டர் தியாகராஜன் அ.தி.மு.க. அனுதாபி என்பது அத்தனை பேருக்கும் தெரியும். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,க்கு தனிப்பட்ட முறையில் பல முறை மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். அவருடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி கூட்டுறவு சங்க தலைவர் பதவி உட்பட பல பதவிகளையும் வகித்துள்ளார்.
அ.தி.மு.க., தி.மு.க., காங்., எந்த கட்சியாக இருந்தாலும் தலைவர்களை சரிகட்டி பதவி வாங்குவதே அவருக்கு கை வந்த கலை. தேனி நகரில் அவரது தாத்தா என்.ஆர்.தியாகராஜன் மிகுந்த மரியாதைக்கு உரிய நபர். பாரம்பரியமான குடும்பம். ஆனால் அவரது பேரன் டாக்டர் தியாகராஜன் மீது பல புகார்கள் உள்ளன. அவர் தேனி நகரி்ல பலரிடம் ஏராளமான அதிருப்திகளை சம்பாதித்து வைத்துள்ளார்.
இந்த விஷயங்களை மீண்டும் தலைமையிடம் கொண்டு சென்றோம். நாங்கள் கொடுத்த தகவல்களை பரிசீலித்த கட்சி மேலிட நிர்வாகிகள், முதல்வரை நாங்கள் சமரசம் செய்து கொள்கிறோம். நீங்கள் எப்படியாவது பதவியை கைப்பற்றுங்கள் என நேற்று இரவே சிக்னல் கொடுத்து விட்டனர். அதன்படி நாங்கள் திட்டமிட்டு துல்லியமாக காய் நகர்த்தி பதவியை கைப்பற்றி உள்ளோம். தற்போது ரேணுப்பிரியா பாலமுருகன் சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்து தான் வென்றுள்ளார். அவர் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே கட்சி தலைமையால் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது சுயேட்சையாக போட்டியிட்டு வென்றுள்ளார்.
கட்சி மேலிடத்தை நாங்கள் எப்படியும் சமரசம் செய்து விடுவோம். மாவட்ட தலைநகரான தேனியினை ரேணுப்பிரியா சுயேட்சையாக கைப்பற்றினாலும் அது தி.மு.க.,வின் கணக்கில் தான் சேரும். கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் முன்னர் சமரசம் செய்து விடுவோம் என்றனர்.
அதேபோல் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் செல்வம் கட்சி வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்துள்ளார். தி.மு.க., நுழையவே முடியாது என சவால் விட்ட வார்டினை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றி உள்ளார். கட்சி பணிக்கு அவர் சிறந்த நபர். அவர் மூலம் கட்சியை பலப்படுத்த பல்வேறு வழிகளில் பலன் கிடைக்கும். இந்த காரணங்கள் மூலமே நாங்கள் தி.மு.க., மேலிடத்தை சரிகட்டினோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu