தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..

தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக  நெல் நடவுப் பணிகள் நிறைவு..
X

நெல் சாகுபடி. (கோப்பு படம்).

தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகள் நிறைவு பெற்று உள்ளன.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் முதல் போக நெல் சாகுபடி நடக்கிறது. பி.டி.ஆர்., கால்வாய் மூலம் கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு போக நெல் சாகுபடி நடக்கிறது. பி.டி.ஆர்., கால்வாயில் திறக்கப்படுவதும் முல்லைப்பெரியாறு நீர் தான். அதேபோல் 18 ஆம் கால்வாயிலும் முல்லைப்பெரியாறு நீர் திறக்கப்பட்டு கண்மாய்களில் சேமிக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இருபோக நெல் சாகுபடி நிலங்களில் தடையின்றி இருபோகமும் அறுவடை நடந்து வருகிறது. இந்த இருபோக நிலங்களில் சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி விட்டன. வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு உள்ளன.

சாலை பணிகளுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டு உள்ளது. அப்படி இருந்தாலும் இன்னும் வேளாண்மைத் துறை கணக்கில் இருபோக சாகுபடி நிலங்களின் பரப்பு 14 ஆயிரத்து 707 ஏக்கர் தான். இந்த விநோன நடைமுறையினை எப்போது வேளாண்மைத்துறை மாற்றப்போகிறதோ தெரியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் வருவாய்த்துறையும் பயிர் விளைச்சல் பதிவுகளில் வேளாண்மைத்துறையுடன் ஆலோசிப்பதும் இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரு போக நெல் சாகுபடி எடுப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. அந்த அளவு இயற்கையும் விவசாயிகளுடன் விளையாடியது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே தேனி மாவட்டத்தில் இயற்கை கை கொடுத்து வருவதால், நெல் சாகுபடி, காய்கறி சாகுபடி என அத்தனை வகை சாகுபடிகளும் மிகவும் சிறப்பாக நடந்து வருகின்றன. குறிப்பிட்ட சில விவசாயிகள் நெருக்கடியில் இருப்பது உண்மை தான். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் ஆறுதலான நிலையில் தான் உள்ளனர்.

அதுவும் நெல் கொள்முதல் நிலையங்களை அரசு தேவைக்கு ஏற்ப திறந்துள்ளது. நெல் கொள்முதலில் ஒருசில குளறுபடிகள் இருப்பதும் உண்மை தான். ஆனால் இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்கிறது. பலன் கிடைத்துள்ளது என்பதும் தவிர்க்க முடியாத உண்மை. அதேபோல் கடந்த நான்கு ஆண்டுகளாக நெல் விளைச்சலும் நல்ல முறையில் இருந்தது. இந்த ஆண்டும் விளைச்சலில் எந்த குறைவும் இல்லை.

இந்த ஆண்டும் இரண்டாம் போக நெல் சாகுபடி நிலங்களில் நடவுப்பணிகள் நிறைவு பெற்று சில நாட்கள் ஆகின்றன. தை மாதத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடி நிலங்களில் அறுவடை தொடங்கி விடும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் நல்ல முறையில் பெய்த நிலையில், வடகிழக்கு பருவமழை கணித்த அளவு அதிகமாக பெய்யவில்லை. இருப்பினும் முல்லைப்பெரியாறு அணையில் நீர் மட்டம் நல்ல முறையில் இருப்பதால், இரண்டாம் போக நெல் சாகுபடியை தடையின்றி எடுத்து விட முடியும். வரும் கோடை காலத்தையும் குடிநீர் பிரச்னை இல்லாமல் சமாளித்து விட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil