முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பில் சிக்கல்?

முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பில் சிக்கல்?
X

பெரியாறு அணை பைல் படம்.

தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. முதல்போக நெல் சாகுபடிக்கு ஜூன் முதல் தேதி பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அணையில் 120 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே நாற்றங்கால் பாவ தண்ணீர் திறக்கப்படும். அடுத்து 125 அடியை தாண்டினால் தான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். எப்போதும் ஜூன் முதல் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். இந்த மழை தொடங்கியதும் அணைக்கு நீர் வரத்து அதிகம் இருக்கும். பாசனம் தடையின்றி நடக்கும்.

இந்த ஆண்டு இப்போது அணையின் நீர் மட்டம் 118.05 அடியாக உள்ளது. மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லாத நிலையில், தென்மேற்கு பருவமழையும் ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் தான் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் 5ம் தேதி மழை தொடங்கினாலும் அணைக்கு நீர் வரத்தாகி, நீர் மட்டம் உயர அடுத்து ஒரு வாரம் பிடிக்கும். எனவே தற்போதைய நிலவரப்படி ஜூன் 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் (மழைக்கு ஏற்ப இந்த தேதி மாறலாம்) தான் தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது. அதன் பின்னர் நாற்றங்கால் பாவி, நடவு செய்ய தாமதம் ஏற்படும். இரண்டாம் போக நெல் சாகுபடியிலும் தாமதம் ஏற்படும். இதனால் விவசாயிகள் தற்போது கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: கடந்த ஆண்டே பருவமழை நல்ல முறையில் பெய்யும் போது, பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துங்கள். அதிகளவு நீரை சேமியுங்கள் என நாங்கள் பலமுறை வேண்டுகோள் வைத்தோம். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் வேண்டுகோளை கண்டுகொள்ளவில்லை.

தற்போது நீர் மட்டம் குறைவாக இருப்பதால் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்புகள் இல்லை என கை விரித்துள்ளனர். எங்கள் கோரிக்கையினை ஏற்று தண்ணீரை சேமித்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக திட்டமிடாமல் செயல்படுவதே பல குழப்பங்களுக்கு காரணமாக உள்ளது. அரசு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story