ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சிய தேனி மாவட்டம்
தேனி நகருக்குள் செல்லும் கொட்டகுடி ஆறு. நகருக்குள் ஓடும் நதி போன்றா தெரிகிறது. ஏதோ வனத்திற்குள் ஓடும் நதி போல் உள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சூரிய ஒளியே தென்படாத ஒரு அடர்ந்த மேககூட்டங்களால் உருவான இருட்டு நிலவி வருகிறது. அதாவது வெயில் இல்லை. வெளிச்சமும், இருட்டும் கடந்த ஒரு கலவையான ரம்மியமான பருவநிலை. அதற்கு மெருகூட்டும் வகையில், லேசாக பெய்து கொண்டே இருக்கும் சாரல் மழை. எங்கு திரும்பினாலும் நிறைந்து காணப்படும் பச்சை பசேல் என்ற பசுமை, 24 மணி நேரமும் வீசும் சில்லென்ற நரம்பினை ஊடுறுவும் குளிர்நிறைந்த ஈரக்காற்று என தேனி மாவட்ட பருவநிலை மிகவும் அற்புதமாக உள்ளது.
குறிப்பாக மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் தேனி மாவட்டமே அமைந்துள்ளதால், எந்த ரோட்டில் பயணித்தாலும், மலையடிவாரத்தில் பயணிக்கும் ஒரு அனுபவமே கிடைக்கும். தவிர சில கி.மீ., பணத்திற்குள் நீர் நிரம்பி ஓடும் ஆறு, ஓடைகள், கண்மாய்களை காண முடியும். குறிப்பாக தேனியில் இருந்து கம்பம் வரை இருபுறமும் உள்ள வயல்களை கிழித்துச் செல்லும் நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் போது, நம்மை கடந்து செல்லும் இயற்கை அழகினை கண்டு பயணிகள் சொக்கித்தான் போவார்கள்.
தேனி மாவட்ட மக்கள் இப்படி ஒரு அற்புதமான பருவநிலையினை அனுபவிப்பதால், இவர்கள் எந்த ஒரு மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றாலும், எங்கள் ஊரை விட இங்கு அழகாக என்ன இருக்கு என்ற கேள்வியே அவர்கள் மனதில் எழும். காரணம் என்ன தெரியுமா? தமிழகத்தில் முதல் அழகான மாவட்டம், நீலகிரி. இரண்டாவது அழகான மாவட்டம் தேனி. அந்த அழகை அனுபவிக்கும் அற்புத தருணங்கள் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்ற வடகிழக்கு பருவமழை காலங்கள் தான். தென்மேற்கு பருவமழை காலமும் நன்றாக இருக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழைக்காலம் தேனி மாவட்டத்தில் சூப்பராக இருக்கும். வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் வந்து இந்த அழகினை அனுபவியுங்களேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu