தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத் திருவிழாவிற்கு வாங்க

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத் திருவிழாவிற்கு வாங்க
X

தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயில் முகப்பு.

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்திருவிழாவான குச்சனுார் சனீஸ்வரபகவான் திருவிழா நடந்து வருகிறது. இந்த நாட்களில் குச்சனூரில் யாரும் அசைவம் சமைக்கவோ உண்ணவோ மாட்டார்கள்

தேனி மாவட்டத்தில் நடைபெறும் கௌமாரியம்மன் கோயில் திருவிழா, மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா, குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயில் திருவிழா ஆகிய மூன்று விழாக்களும் மிகுந்த சிறப்பு பெற்றவை. காரணம் கௌமாரியம்மன், காமாட்சியம்மன், சனீஸ்வரபகவான் கோயில் விழாக்காலங்களில் தேனி மாவட்ட மக்கள் முழு அளவிலான ஐதீக நடவடிக்கைகளை பிடிப்பார்கள். கோயிலில் மட்டுமல்ல, விழாத்திடலில் கூட ஐதீக நிகழ்வுகள் மாறாமல் நடைபெறும். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த மூன்று விழாக்களிலும் பங்கேற்பார்கள்.

இப்போது ஆடி மாதம் என்பதால் குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயில் விழா நடந்து வருகிறது. பொதுவாகவே ஆடி மாதம் முழுக்க சுயம்பு பகவானான சனீஸ்வரனை வணங்கிட பக்தர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் ஆடி மாத சனிக்கிழமைகளில் தான் கூட்டம் அலைமோதும். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். விழாத்திடல் முழுக்க சுமார் 3 கி.மீ., துாரம் இருபுறமும் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்படி ஐந்து சனிக்கிழமைகளிலும் விழா நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இவர்களை குச்சனுார் மக்கள் மிகுந்த வாஞ்சையுடன் வரவேற்பார்கள். அதாவது குச்சனுாரில் ஐந்து சனிக்கிழமைகளிலும் இறைச்சிக்கடைகள், மீன்கடைகள் என எதுவும் திறந்திருக்காது. மற்ற தினங்களில் வழக்கம் போல் இந்த கடைகள் இருக்கும்.

இந்த ஐந்து சனிக்கிழமைகளிலும் ஒட்டுமொத்த பேரூராட்சி மக்களும், சுற்றிலும் கோயில் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் அசைவம் சாப்பிடுவதில்லை, சமைப்பதில்லை. அத்தனை ஓட்டல்களும் சைவமாக மாறியிருக்கும். ஆம்லெட் கூட கிடைக்காது. குச்சனுார் மக்களுக்கு தினமும் சனீஸ்வரபகவானை வழிபடும் பாக்கியம் உள்ளது. ஆனால் தங்கள் ஊருக்கு ஆடி மாத சனிக்கிழமைகளில் பக்தியுடன் பகவானை வழிபட வரும் பக்தர்களை நேர்த்தியுடன் கவனிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஐந்து சனிக்கிழமைகளிலும் மக்கள் தங்கள் வீடுகளில் எந்த ஒரு சிறு அசைவ உணவும் சமைப்பதில்லை.

இது மிகவும் சிறப்பான ஒரு விஷயம். தவிர குச்சனுாரில் டாஸ்மாக் கடை கிடையாது. ஆனால் குடிமகன்கள் அதிகம் உள்ளனர். தினமும் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் விற்பனை கொடிகட்டிப்பறக்கும். ஆனால் விழாக்கால சனிக்கிழமைகளில் இவர்களும் ஒதுங்கி விடுகின்றனர். அப்படியே பாட்டில் வாங்கும் குடிமகனும் பகல் பொழுது முழுக்க ஊருக்குள் வருவதில்லை. இதனால் எந்த ஒரு குடிமகனாலும் பக்தர்களுக்கு தொல்லை என்ற பேச்சே இருக்காது.

குச்சனுாரின் மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள உள்ளாட்சிகளின் ரோடுகள். இங்கு எந்த வீட்டுக்காரரும் ரோட்டை ஆக்கிரமிப்பதில்லை. இங்கு ஒரு வழக்கம் உள்ளது. நம்ம இடம் ஒரு அடி போனாலும் பரவாயில்லை. அடுத்தவன் இடம் நமக்கு வேண்டாம் என 90 சதவீதம் மக்கள் நினைக்கின்றனர். இதனால் நிலத்தகராறுகள், ரோடு ஆக்கிரமிப்புகள் இங்கு மிக, மிக குறைவு.

இன்னொரு முக்கிய காரணம், நிலத்தை ஆக்கிரமிப்பில் பறி கொடுத்த யாராவது சுயம்புவாக நிற்கும் சனிபகவான் முன்பு நின்று ஒரு சொட்டு கண்ணீர் வடித்தால், ஆக்கிரமிப்பாளர்கள் அழிந்து போவார்கள். சனிபகவான் தண்டித்து விடுவான் என இந்த ஊர் மக்கள் தங்கள் தெய்வத்தை மிகவும் திடமாக நம்புகின்றனர். இவர்கள் சிறப்பான வாழ்விற்கு இந்த தெய்வீக நம்பிக்கையும் முக்கிய காரணம்.

இன்னொரு முக்கிய நிகழ்வும் உண்டு. பெற்ற மகன்கள், மகள்கள் குச்சனுாரில் உள்ள தங்கள் தாய் வீட்டிற்கு வந்தாலும் சரி, வேறு எந்த உறவுக்காரர்கள் குச்சனுாரில் தங்கள் உறவுகளின் வீட்டிற்கு வந்தாலும் சரி, எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கலாம். சனிபகவானை அவர்கள் தரிசித்து விட்டால், திரும்ப எக்காரணம் கொண்டும் மீண்டும் உறவுக்காரர்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது. நேராக தங்கள் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும்.

அப்படி தங்கள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் குச்சனுாரில் உள்ள தங்கள் உறவுகளை தேடி வரலாம். சாமி கும்பிட்ட உடனே சொந்த வீடு செல்ல வேண்டும். அந்த ஊர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி ஊருக்கு சென்றே ஆக வேண்டும். இப்படி ஒரு வழக்கமும் உள்ளது. இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்பே உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்று வந்து விடுவார்கள்.

இப்படி பல்வேறு சிறப்புகளை கடைபிடித்து வரும் குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயிலில் கடந்த வாரம் சனிக்கிழமை கொடியேற்றம் நடந்தது. இரண்டாவது ஆடி சனிக்கிழமை பக்தர்கள் சாமி வழிபாடு நடந்தது. இன்னும் மூன்று சனிக்கிழமைகள் வழிபாடு நடக்கும். நான்காவது சனிக்கிழமை வழிபாடு முடிந்த பின்னர், வரும் திங்கள் கிழமையில் நடைபெறும் சோனை கருப்பசாமி கோயில் பொங்கல் விழாவில் மதுபானங்களை சாமிக்கு படைத்து, கிடா வெட்டி அசைவ விருந்து நடக்கும். அதன் பின்னரே குச்சனுாரில் சற்று இயல்பு நிலை திரும்பும்.

இங்கு ஆன்மீக நிகழ்வுகளை துல்லியாக பதிவு செய்யும் இந்த திருவிழாவை வாய்ப்புள்ளவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு பதிவிடப்படுகிறது.

Tags

Next Story