உயரும் ஆவின் விற்பனை டார்க்கெட்: பரிதவிக்கும் ஏஜன்ட்கள்
தேனி மாவட்டத்தில் ஆவின் பால், நெய், வெண்ணெய், குலோப்ஜாமுன், பால்கோவா இதர சுவீட் வகைகளை குறிப்பிட்ட அளவு கட்டாயம் விற்க வேண்டும் என நிர்வாகம் ஒவ்வொரு ஏஜன்டுக்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கினை நிச்சயம் எட்ட முடியாது என ஏஜன்ட்கள் பரிதவித்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஆவினை பொறுத்தவரை நெய் மட்டுமே தரம் மிகுந்ததாக உள்ளது. இது கெட்டும் போகாது என்பதால் ஆவின் நெய்க்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஆனால் ஆவின் வெண்ணெய், பால்கோவா, குலோப்ஜாமுன் தவிர இன்னும் பல சுவீட் வகைகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இவற்றின் தரமும் குறைவு, விலையும் அதிகம். குறிப்பாக குலோப்ஜாமுன் தயாரிப்பில் தனியாருடன் ஆவினால் போட்டி போடவே முடியாது. தனியார்கள் அதிக தரமும், சுவையும் மிகுந்த குலோப்ஜாமுனை குறைந்த விலைக்கு தருகின்றனர். இதனை ஒப்பிடும் போது, ஆவின் வழங்கும் குலோப்ஜாமுன் தரமும், அளவும் குறைவு. விலையும் அதிகம்.
இதே நிலைதான் ஆவின் தயாரிக்கும் அத்தனை சுவீட்களுக்கும் உள்ளது. தவிர தனியார்கள் தீபாவளி ஆர்டர்களே முன்கூட்டியே பிடித்து விற்பனை முடித்து விடுகின்றனர். ஆவின் ஓரிரு நாட்களுக்கு முன்னரே இந்த பொருட்களை சப்ளை செய்கின்றனர். இந்த ஆண்டிற்கான இலக்கினையும் ‛கிடுகிடு’வென உயர்த்தி விட்டனர்.
ஆவின் சுவீட்களை தாமதமாக கொடுப்பதால், அத்தனை வாடிக்கையாளர்களும் வெளியில் வாங்கி விடுகின்றனர். இருப்பினும் எப்படியும் விற்றே ஆக வேண்டும். ரிட்டன் எடுக்க முடியாது என பிடிவாதம் பிடிக்கின்றனர்.
ஆவினில் மிகுந்த அளவு வாய்ப்புகள், வசதிகள் உள்ளன. இவ்வளவு இருந்தும் முறையற்ற நிர்வாகம் காரணமாக தரமான பொருட்களை தருவதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. தனியாருடன் போட்டியிட்டு வெற்றி பெற ஆவின் தனது தயாரிப்பின் தரத்தை உயரத்தினால் மட்டுமே முடியும். இல்லாவிட்டால் தீபாவளியில் நாங்கள் நஷ்டப்பட்டோம். பொங்கல் விழா டார்க்கெட்டிலும் நஷ்டப்பட வேண்டியிருக்கும் என தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை ஏஜன்ட்களும் புலம்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu