விவசாய சங்கத்தினரை அவமதித்த தேனி ஆட்சியர்: விவசாயிகள் கடும் அதிருப்தி
தேனி ஆட்சியர் சஜீவனா.
தேனி மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் தலைமையில் இதர நிர்வாகிகள் சலேத்து, பொன்.காட்சி கண்ணன், தேவாரம் மகேந்திரன், ராதாகணேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் உசிலம்பட்டி நேதாஜி உட்பட பலர் ஆட்சியர் சஜீவனாவை சந்திக்கச் சென்றனர்.
தனது சேம்பருக்குள் இவர்களை அழைத்த ஆட்சியர் சஜீவனா, யாரையும் அமரச் சொல்லவில்லை. அவர்கள் கூற வந்த விஷயத்தையும் காது கொடுத்து கேட்கவில்லை. சில நிமிடங்கள் அவர்களை நிற்க வைத்து, வழக்கமாக பொதுமக்களிடம் மனு வாங்குவதைப் போல் அவர்களின் மனுவை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்துவிட்டார்.
இதனால் மனம் உடைந்த விவசாய சங்க நிர்வாகிகள், ‘‘ 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஆட்சியர் எங்களை அவமதித்தது மட்டுமின்றி, நாங்கள் சொல்ல வந்த விவசாயிகளின் பிரச்னையை காது கொடுத்து கேட்கக் கூட ஆட்சியருக்கு நேரம் இல்லை. அவர் மக்கள் பணியாளர் தானே. மக்களுக்கு சேவை செய்யத்தானே ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் நாங்கள் கூற வந்த விஷயமும் பொதுவான விவசாயிகள் பிரச்சனை தானே.
விவசாயிகளின் பிரச்னையை அதிகாரிகள் முழுமையாக ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதில்லை என்ற புகார் பல ஆண்டுகளாக உள்ளது. நாங்கள் சொல்வதையும் ஆட்சியர் கேட்க முன்வராவிட்டால், என்ன செய்ய முடியும் என கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனை பற்றி பல்வேறு விவசாயிகள் சங்கத்தினரும் ஆட்சியரின் செயல்பாட்டை கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu