சமூக விரோதிகளின் பிடிக்குள் தேனி பஸ்ஸ்டாண்ட்: போலீசாரின் இரும்புக்கரம் நீளுமா?

சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி உள்ள தேனி புதிய பஸ்ஸ்டாண்ட். சமூக விரோதிகளின் தொல்லைகளால் மக்கள் இங்கு வரவே அச்சப்படுகின்றனர்.
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதிகள் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அனைத்து விதமான சட்ட விரோத செயல்களும் நடைபெறுகின்றன என வியாபாரிகள் புலம்புகின்றனர்.
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. பல முறை புதுப்பிக்கப்பட்டும் விட்டது. புதிய பஸ்ஸ்டாண்டில் 24 மணி நேர கடைகள் ஏராளமாக உள்ளன. அதேபோல் 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து வசதிகள் உள்ளது. ஆள் நடமாட்டம் உள்ளது. பஸ்ஸ்டாண்டினை சுற்றிலும் ஏராளமான டாஸ்மாக் கடைகள், பார்கள் உள்ளன. தவிர பஸ்ஸ்டாண்டில் கட்டுமான பகுதிகளிலேயே ஏராளமான இருட்டு பகுதிகளும் உள்ளன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளும் உள்ளன.
இங்கு இரவில் அத்தனை விதமான சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. தவிர கஞ்சா, இரவெல்லாம் மதுபாட்டில் விற்பனை களைகட்டி வருகிறது. பெண்கள் சமாச்சாரமும் நடைபெறுகிறது. தவிர புதிய பஸ்ஸ்டாண்டின் சில பகுதிகளை இரவில் உலர் கழிப்பிடமாக மாற்றி விடுகின்றனர். இரவெல்லாம் சமூக விரோதிகள் அதகளப்படுத்துவதால் மறுநாள் காலை பஸ்ஸ்டாண்டினை சுத்தம் செய்ய வரும் பணியாளர்கள் இவ்வளவு அறுவெறுப்பு நிறைந்த அசுத்தங்களா என நினைத்து மனம் உடைந்து போய் விடுகின்றனர். என்ன தான் அவர்கள் சுத்தம் செய்தாலும், துர்நாற்றம் பஸ்ஸ்டாண்ட் பகுதியை சூழ்ந்து கொண்டுள்ளது.
இரவில் பஸ் ஏற வரும் பெண்களுக்கு போதிய அளவு பாதுகாப்பு வசதிகளும் இல்லை. தற்போது பஸ்ஸ்டாண்டில் ஒரு அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இருப்பினும் இங்கு கூடுதல் போலீசாரை நியமித்து இரவெல்லாம் ஸ்டேஷன் செயல்படும் வகையில் பாதுகாப்பான நிலைமையினை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu