அடிப்படை வசதியின்றி காணப்படும் தேனி 4வது வார்டு: வேட்பாளரிடம் மக்கள் குமுறல்
ஓட்டு கேட்கும் போது துணி தேய்த்து கொடுத்த தேனி 4வது வார்டு சுயே., வேட்பாளர்.
தேனி நகராட்சி நான்காவது வார்டு ஒதுக்கப்பட்ட சேரிப்பகுதி போல் அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது என வார்டு மக்கள் ஓட்டுக்கேட்டு வந்த சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.,ராஜனிடம் தெரிவித்தனர்.
தேனி நகராட்சி 4வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.ராஜன் மிகவும் வித்தியாசமான அதிர வைக்கும் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை கவர்ந்துள்ளார். ரூ.10க்கு உயிர் காக்கும் சிகிச்சை, சொந்த செலவில் வீடு தோறும் இலவச மினரல் வாட்டர், எனது வருமானத்தில் பாதி மக்களுக்கு என்பது உட்பட பல்வேறு வித்தியாசமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறார்.
அவருடன் பிரச்சாரத்திற்கு வர பல்வேறு சமூக அமைப்பினர் முன்வந்தும், அன்பாக வர வேண்டாம் என மக்களுக்கு பெரிய தொந்தரவு தரக்கூடாது என மறுத்து விட்டார். தானாக ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து, அவர்களிடம் பொறுமையாக, தான் யார்? என்ன தொழில் செய்கிறேன். தனது தேர்தல் வாக்குறுதி என்ன? தனது வாக்குறுதிகளை எப்படி செயல்படுத்த முடியும் என்ற முழு விவரங்களையும் பொறுமையாக விளக்கி தன்னுடைய சின்னமான தென்னைமரத்திற்கு ஓட்டு கேட்டு வருகிறார்.
இது குறித்து வி.ஆர்.ராஜன் கூறுகையில், நான் ஓட்டுக்கேட்டு சென்ற போது மூதாட்டி ஒருவர் விதவை பணம் வாங்கித்தருமாறு என்னிடம் மனு கொடுத்தார். நான் இன்றே அவரது விண்ணப்பத்தை இ-சேவை மையம் மூலம் அரசுக்கு அனுப்பிவிட்டேன். தேர்தல் நடைமுறை முடிவுக்கு வந்ததும் அதிகாரிகளிடம் பேசி, அந்த மூதாட்டிக்கு பணம் பெற்றுத்தந்து விடுவேன்.
நான் சென்ற இடங்களில் அடிப்படை வசதிகள் மிக, மிக மோசமாக இருந்தது. ஒரு சேரிப்பகுதியை விட மிகவும் வசதிக்குறைபாடு அதிகம் இருந்ததாக மக்கள் என்னிடம் புகார் தந்தனர். அதனை நானே நேரிலும் பார்த்தேன். இந்த பகுதிகளை மேம்படுத்த வேண்டும். அதற்கு எனக்கு தென்னை மரச்சின்னத்தில் ஓட்டளியுங்கள் என கேட்டேன். மக்களும் விரும்பி தென்னை மரச்சின்னத்தில் ஓட்டளிப்பதாக உறுதி அளித்தனர் எனக் கூறினார்.
வி.ஆர்.ராஜன் ஓட்டு கேட்டு சென்றபோது, ஒரு இடத்தில் துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்த பெண்ணிடம், தான் அயர்ன் செய்து தருவதாகக் கூறி சில சட்டைகளை அயர்ன் செய்து கொடுத்தார். 'சார், என்னை விட நன்றாக துணி தேய்க்கிறீர்கள். எப்படியும் உங்களுக்கு ஒரு கைத்தொழில் உள்ளது என பல கோடிக்கு சொந்தமான தொழிலதிபர் ராஜனை கலாய்த்து கலகலப்பூட்டினார். இதனை கேட்ட வேட்பாளர் ராஜன் பலமாக சிரித்து தன் மகிழச்சியை வெளிப்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu