தேனி 14வது வார்டு காங்., வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து தடபுடல் வரவேற்பு

தேனி 14வது வார்டு காங்., வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து தடபுடல் வரவேற்பு
X

தேனி பதினான்காவது வார்டு காங்., வேட்பாளர் நாகராஜூக்கு பெண்கள் நெற்றித்திலகம் இட்டு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

தேனி நகராட்சி 14வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜூக்கு ஓட்டு சேகரிக்க சென்ற இடங்களில் மக்கள் ஆரத்தி எடுத்து, நெற்றித்திலகம் இட்டு தடபுடல் வரவேற்பு கொடுத்தனர்.

தேனி நகராட்சியில் 14வது வார்டில் காங்., வேட்பாளராக இரண்டாம் முறையாக களம் இறங்குபவர் நாகராஜ். இவரது குடும்பம் கடந்த நான்கு முறை இப்பகுதியில் தொடர்ச்சியாக கவுன்சிலர் பதவியை வென்றுள்ளது.

ஐந்தாவது முறையாக வெற்றியை பெற களம் இறங்கி உள்ள நாகராஜ், இன்று காலை 14வது வார்டில் ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அவர் பாலர் பள்ளி தெருவில் சென்ற போது, அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு வசதி வேண்டும் என கேட்டனர்.

சிவராம் நகரி்ல் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் இன்னும் சாக்கடை வசதி மேம்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பதிலளித்த நாகராஜ், இந்த பணிகளை முழுமையாக செய்து தருகிறேன். தவிர இப்பகுதியில் உள்ள வால்கரடு மலைப்பகுதியின் அடியில் நீண்ட கான்கிரீட் ஓடை கட்டி, வால்கரட்டில் பெய்யும் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான பணிகளை இப்போதே தொடங்கி விட்டேன் என பதிலளித்தார்.

சென்ற இடங்களில் எல்லாம் நாகராஜை வரவேற்ற மக்கள் ஆரத்தி எடுத்து, நெற்றித்திலகம் இட்டு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். 'நான் போட்டியிடும் வார்டு எனது உறவினர்கள் அதிகம் வசிக்கும் பகுதி தான். ஆனால் எனக்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் உள்ளது. இதனை நீங்களே நேரில் பார்த்து செய்தி வெளியிடுங்கள். நான் அத்தனை மக்களுக்கும் பொதுவானவன். அதனை நீங்கள் தவறாமல் செய்தியில் குறிப்பிடுங்கள்' என நாகராஜ் நிருபர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைத்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!