தேனி 107 மி.மீ., போடி 100 மி.மீ., மாவட்டம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அடைமழை பெய்கிறது. ஒட்டுமொத்த தேனி மாவட்டத்தின் சீதோஷ்ண நிலையும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசத்திற்கு இணையாக மாறி விட்டன. அதிக ஈரப்பதம் நிறைந்த காற்று, இருளடைந்த வானிலை, சுற்றிலும் மலைகள், இயற்கை என தேனி மாவட்டத்தில் அழகு கொட்டிக்கிடக்கிறது. இதில் மழையால் தேனி மாவட்டத்தின் வனப்பும் கூடியிருக்கிறது.
நேற்று முன்தினம் பலத்த மழை பதிவான நிலையில், நேற்று முழுக்க மழை பெய்தது. ஆண்டிபட்டியில் 15.6 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 37.6 மி.மீ., தேனி வீரபாண்டியில் 107 மி.மீ., பெரியகுளத்தில் 55 மி.மீ., மஞ்சளாறில் 27 மி.மீ., சோத்துப்பாறையில் 51 மி.மீ., வைகை அணையில் 8 மி.மீ., போடியில் 100.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 26.6 மி.மீ., கூடலுாரில் 1.8 மி.மீ., பெரியாறு அணையில் 12 மி.மீ., தேக்கடியில் 4.6 மி.மீ., சண்முகாநதி அணையில் 14.2 மி.மீ., மழை பதிவானது. இன்னும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 66.50 அடியை எட்டியுள்ளதால், கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 3200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நேரம் ஆக, ஆக நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். பெரியாறு அணைக்கு விநாடிக்கு 1700 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணை நீர் மட்டம் 125.50 அடியை தொட்டுள்ளது. இதேபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வரும் நவம்பர் 10ம் தேதி மதுரை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணை திறக்கப்படும். விநாடிக்கு 900 கனஅடி நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் பெரியாறு, வைகை, கொட்டகுடி ஆறு, வராகநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சின்னசுருளி அருவி, சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, அணைக்கரைப்பட்டி நீர் வீழ்ச்சிகளில் குளிக்கவும், அப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu