முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ரூல்கர்வ் முறைப்படி கேரளாவிற்கு நீர் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளா வழியாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் திறந்து விட்டனர்.
கேரளாவை நோக்கி ஓடிக்கொண்டிருந்த முல்லை, பெரியாறு ஆறுகளை மறித்து கட்டப்பட்டது பெரியாறு அணை. இந்த அணையில் 136 அடிக்கு மேல் தேக்கப்படும் நீரை கேரளா வழியாக எவ்வளவு வேண்டுமானாலும் திறக்கலாம். அதாவது விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் கூட கேரளா வழியாக திறக்க முடியும். ஆனால் மிக கன மழை பெய்யும் போது கூட அணைக்கு அதிகபட்சம் நீர் வரத்தே விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி மட்டுமே. பெரியாறு அணைக்கு நீர் வரும் வழித்தடங்களை திசைமாற்றி தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையை நோக்கி கேரளா திருப்பி விட்டுள்ளது. நேற்று பெய்த பலத்த மழையில் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் பெரியாறு அணைக்கு வந்தது.
அணை நீர் மட்டம் 137.50 அடியை எட்டியதால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளா வழியாக தண்ணீரை திறந்து விட்டனர். ரூல் கர்வ் முறைப்படி அணையில் 137.50 அடி நீர் மட்டுமே தற்போது தேக்க முடியும். கூடுதலாக வரும் நீரில் தமிழகப்பகுதிக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட்டு மீதம் உள்ள நீரை கேரளா வழியாக வெளியேற்றி வருகின்றனர்.
மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்கள் தண்ணீர் இன்றி வாடி வரும் நிலையில், முல்லை பெரியாறு நீரை வீணாக கேரளா நோக்கி திறப்பதை கண்டு தமிழக விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் அத்தனை வகையிலும் தமிழகத்தை விட கேரளா அசுர பலத்துடன் உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிப்பதில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு கூட கேரளாவிற்கு சாதகமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும். இல்லையென்றால் உதறித்தள்ளி விடும். கேரள வனத்துறையின் அராஜகத்தை ஒடுக்க முடியவில்லை. கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக நடக்கும் பிரச்சாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
எந்த சுப்ரீம் கோர்ட் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உத்தரவிட்டதோ அந்த சுப்ரீம் கோர்ட் மூலமே ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தி கேரளா இப்பிரச்னையில் பெரும் வெற்றியை ஈட்டி உள்ளது என தமிழக விவசாயிகள் மிகுந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu