துப்புரவு தொழிலாளியை பாராட்டி மகுடம் சூட்டிய பேரூராட்சி தலைவர்

பட்டுச்சேலை கட்டி ஏலக்காய் மாலை அணிந்து தலைவர் சேரில் அமர்ந்திருப்பவர் துப்புரவு பணியாளர் வேலம்மாள். அருகில் தலைவர் (வெள்ளைச்சட்டை) மிதுன்சக்கரவர்த்தி, துணைத்தலைவர் (நீலச்சட்டை) மணிமாறன்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் வேலம்மாள். இவர் பழனிசெட்டிபட்டி கிராம ஊராட்சியாக இருந்த போதே துப்புரவு பணியில் சேர்ந்தவர். நிரந்தர பணியாளராக மாறி 37 ஆண்டுகள் ஆகி விட்டது. இவரது பணிக்காலத்தில் ஒருமுறை கூட விடுப்பு எடுத்தது இல்லை. (விடுமுறை எடுக்காமல் இவர் சேர்த்து வைத்திருந்த விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மட்டும் ரூ.4.50 லட்சம் இன்று வழங்கப்பட்டது). அதேபோல் ஒருநாள் இவரது மேஸ்திரியோ, சுகாதார ஆய்வாளரோ இவரது பணியை குறை சொல்லியதில்லை. அந்த அளவு துப்புரவு பணியினை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வந்துள்ளார். கொரோனா காலத்திலும் இவரது சிறப்பான பணி மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தது.
இப்படி பல வழிகளிலும் சிறப்பாக பணியாற்றிய இவர் ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இவரது பிரிவு உபச்சார விழா பேரூராட்சி தலைவர் (வக்கீல்) மிதுன்சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மணிமாறன், செயல் அலுவலர் சின்னச்சாமி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். பட்டுச்சேலை, சட்டை அணிந்து வந்த இவரை பேரூராட்சி தலைவரும், துணைத்தலைவரும் சேர்ந்து தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். மிகவும் விலை உயர்ந்த மிக, மிக நேர்த்தியாக கட்டப்பட்ட ஏலக்காய் மாலையினை அணிவித்தனர். தலைவர் சீட்டில் அமர வைத்து காபி, ஸ்நாக்ஸ் கொடுத்து உபசரித்து அருகில் நின்று படமும் எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன் கூறுகையில், 'எந்த பணியினை யார் சிறப்பாக செய்கிறார்களோ அவர்கள் தான் அந்த பணியின் முன்னோடி. அந்த வகையில் வேலம்மாள் தமிழகம் முழுவதும் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு முன்னோடியாக இருக்கிறார். இவரது சேவைப்பற்றி கேள்விப்பட்ட எங்களுக்கு இவரை கவுரவிக்க சந்தர்ப்பம் கிடைத்தது' என்றனர். இதர துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், 'எங்கள் தலைவரும், துணைத்தலைவரும் எங்களின் துப்புரவு தேவதைக்கு மகுடம் சூட்டிய இந்த நாளை நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மறக்க மாட்டோம். இனிமேல் எங்கள் தலைவர், துணைத்தலைவருக்கு நற்பெயர் பெற்றுத்தருவது மட்டுமே எங்கள் பணியாக இருக்கும். அதற்காக நாங்கள் அத்தனை பேரும் வேலம்மாள் போன்றே பணியாற்றி பெயர் வாங்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu