தேனி மாவட்டத்தில் அடியோடு வீழ்ந்த சுற்றுலாத் தொழில்!

தேனி மாவட்டத்தில் அடியோடு வீழ்ந்த சுற்றுலாத் தொழில்!
X
தேனி மாவட்டத்தில் சுற்றுலா தொழில் அடியோடு வீழ்ந்து விட்டது.

வாடகை வாகனம் ஓட்டும் 8 ஆயிரம் பேர் வருவாய் பற்றாக்குறையால் கடனாளி ஆகி உள்ளனர். பலர் வாகனங்களை விற்று விட்டு, ஆட்டோ வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் வளம் கொழிக்கும் மாவட்டம். மிகச்சிறந்த சுற்றுலா தளங்களை கொண்ட மாவட்டம். வேறு மாவட்டங்களில் இருந்து கேரளா வரும் பலர் தேனி மாவட்டத்தில் இரண்டு நாள் தங்கி சுற்றிப்பார்ப்பது வழக்கம். தவிர தேனி மாவட்டத்தை சேர்ந்த பல லட்சம் பேர் ஆண்டு தோறும் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள். இவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல தேனி மாவட்டத்தில் சிறிய மற்றும் பெரிய ரகங்களை சேர்ந்த 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா தொழில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. தவிர வெளி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. தொழில் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, வேலை வாய்ப்புகள் பறிபோனது, பணப்புழக்கம் சரிவு போன்ற காரணங்களே சுற்றுலா தொழில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே வருவாய் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வாகனம் ஓட்டுனர்களுக்கு அரசும் விதிமுறைகளை கடுமையாக்கி மேலும் நெருக்கடி கொடுத்துள்ளது. வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் லைப் டாக்ஸ் எனப்படும் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் பராமரிப்பு செலவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல்வேறு காரணங்களால் சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்கள் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளனர். இதனால் பலரும் தங்களது வாகனத்தை விற்று விட்டு, வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். பலர் ஆக்டிங் டிரைவர்களாக மாறி விட்டனர். பலர் ஆட்டோ ஓட்டுனர்களாக மாறி விட்டனர்.

இது குறித்து வாடகை கார் ஓட்டுனர்கள் கூறியதாவது : முதல் காரணம் மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. வாகனங்களின் வரி, இன்சூரன்ஸ், லைப் டாக்ஸ் போன்றவை உயர்த்தப்பட்டது இரண்டாவது காரணம். உதிரி பாகங்களின் விலை உயர்வு, வாகனங்களின் பராமரிப்பு செலவு, அதிகரித்தது மூன்றாவது காரணம். தொழில் நடக்காததால் கடன் கட்ட முடியாமல் வாகனத்தை விற்று விட்டு பலர் வேறு தொழிலுக்கு செல்கின்றனர். தற்போதைய நிலையில் ஆக்டிங் டிரைவராக செல்பவர்களே அதிகம்.

காரணம் குறிப்பாக சொந்த பயன்பாட்டிற்கு வாகனங்களை வாங்குபவர்கள் அதனை சுற்றுலாவிற்கு வாடகைக்கு விடுகின்றனர். சுற்றுலா வாகனம் தரத்திற்கு ஏற்ப ஒரு கி.மீ., துாரத்திற்கு 9 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை பல்வேறு கட்டணங்களை நிர்ணயித்து வசூலிக்கின்றனர். ஆனால் சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் இதனை விட மிக குறைந்த கட்டணத்திற்கு வாடகைக்கு விடுகின்றனர். தவிர சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்லும் போதும், ஆர்.டி.ஓ., பெர்மிட், மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் பெர்மிட் வாங்குவது மிக, மிக எளிது. சுற்றுலா வாகனங்களில் சென்றால் ஆர்.டி.ஓ., பெர்மிட், எல்லை சோதனை சாவடி பெர்மிட்களுக்கு கட்டணம், தனியாக லஞ்சப்பணம் என ஏராளமாக செலவிட வேண்டி உள்ளது. தவிர போலீசாரும் சொந்த காரில் வருபர்களிடம் தொந்திரவு செய்வதில்லை. வாடகை காரில் வருபவர்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து பல்வேறு வசூல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற காரணங்களால் சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்களிடம் வாடகைக்கு எடுத்து, டீசல் போட்டு, ஆக்டிங் டிரைவர் வைத்து செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் வேலை இழந்த சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்கள் தங்களது வாகனத்திற்கு தவணை கட்ட முடியாமல் வாகனத்தை விற்்று விட்டு ஆக்டிங் டிரைவராக சென்று விடுகின்றனர். சிலர் ஆட்டோ வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்ளின் நிலை தேனி மாவட்டத்தில் மிகவும் மோசமாக மாறி விடும். இதனை தடுக்க சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்களுக்கு அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது, இன்சூரன்ஸ், லைப் டாக்ஸ் உள்ளிட்ட வரிச்சலுகை செய்வது, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் மாசி மகாசிவராத்திரி போன்ற மிக முக்கிய திருவிழாக்காலங்களில் கூட வாகனங்களை யாரும் வாடகைக்கு கேட்பதில்லை. அந்த அளவு நிலைமை மோசமாக உள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் இந்த தொழிலை நம்பி 8 ஆயிரம் பேர் இருக்கிறோம். நாங்கள் வருவாய் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கடனில் சிக்கிக்கொண்டு தவிக்கிறோம். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil