நிலவின் பல தகவல் கிடைக்கும் வாய்ப்பளித்த சந்திரயான்-3 வெற்றி

நிலவின் பல தகவல் கிடைக்கும் வாய்ப்பளித்த சந்திரயான்-3 வெற்றி
X

பைல் படம்

சந்திரயான்-3 வெற்றி மூலம் நிலவினை பற்றிய பல தகவல்கள் இந்தியாவிற்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது

சந்திரயான்-3 வெற்றி மூலம் நிலவினை பற்றிய பல தகவல்கள் இந்தியாவிற்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. செப்டம்பர் 6, 2019 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த அறிவியல் உலகமும், சந்திரயான் 2ன் தரை இறங்குதல் நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 2.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, இன்ஜின் கோளாரால் நிலவின் மேற்பரப்பில் மோதியது.

சந்திரயான் 2 திட்டத்தின் தரையிரங்கும் திட்டம் தோல்வி அடைந்த நிலையில், ஆர்பிட்டர் தொடர்ச்சியாக சுற்றி வந்தது. இதனால் ‘சந்திரயான்-2 திட்டம் முழுமையாக தோல்வி அடையவில்லை. பகுதியாக மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. தற்போது இதிலிருந்து நம்மால் பாடம் கற்றுக் கொள்ள முடியும். விரைவில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் பயன்படுத்தப்படும்’ என்றார் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்.

இஸ்ரோ சிவன் கூறி ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில், இன்னமும் ஆர்பிட்டர் இயங்குகிறது. அந்த ஆர்பிட்டரும் சந்திரயான் 3 திட்டத்தின் தொலைத் தொடர்புக்காக இணைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு வருடம் மட்டுமே ஆர்பிட்டர் செயல்படும் என கணக்கிடப்பட்ட நிலையில், எரிபொருள் மிச்சத்தால் ஏழரை வருட காலம் சந்திரயான் 2 ஆர்பிட்டரால் நிலவை சுற்றிவர முடியும் என தெரியவந்தது.

நிலவை சுற்றி போலார் சுற்றுவட்ட பாதையில், ஆர்பிட்டர் சென்று கொண்டிருக்கிறது. அது தரும் தரவுகளை வைத்து பல ஆராய்ச்சிகளை இவ்வளவு நாட்கள் இஸ்ரோவால் செய்ய முடிந்தது. இத்திட்டத்தினால், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுக்கு நிலவின் தரவுகள் கிடைக்கப் பெற்றதோடு புகைப்படங்கள் எடுக்கக்கூடிய உள்கட்டமைப்பும் இதில் இருக்கிறது என்பதால், நிலவின் வெவ்வேறு கோணங்களினாலான புகைப்படங்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது.

இதுதான் சந்திரயான் 3 திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்து வதற்கு சாதகமாகவும் அமைந்தது. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சந்திரயான் 2ன் ஆர்பிட்டர், சந்திரயான் 3 லேண்டரோடு தொலைத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆர்பிட்டர் எடுத்த நிலவின் தென்பகுதியின் புகைப்படங்களை ஒப்பீடு செய்து தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரையிரக்கப்பட்டது. அதேபோன்று சந்திரயான் 3 லேண்டரை சுமந்து வந்த உந்துவிசைக் கலனும் தற்போது நிலவை சுற்றி வருகிறது.

இது அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நிலவின் மேற்பரப்பை சுற்றி வர முடியும் என்றும் அதற்கான எரிபொருள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆர்பிட்டர் போன்று பல கட்ட ஆய்வுக் கருவிகள் சென்சார்கள் உந்துவிசை கலனில் கிடையாது. ஆனால், சந்திரயான்-3 உந்துவிசைக் கலன் பூமியின் வளிமண்டலத்தையும் சூரிய குடும்பத்தின் கோள்களின் நிலையையும் கண்காணிக்கும் வகையில் செயல்படும். நிலவின் மேற்பரப்பில் விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கண்டறிய முடியும்.

சந்திரயான் 3ன் லேண்டரும் ரோவரும் தரையிறங்கிய பின் ஏழு விதமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் நிலையில், ஏற்கெனவே ஆர்பிட்டரும் உந்துவிசைக் கலனும் இந்தியா சார்பாக நிலவை தற்போது சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி, சீனா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் விண்கலம் தான் நிலவை சுற்றி வருகிறது.

இதன் மூலம் நிலவில் ஏற்படும் சில மாற்றங்களை அடுத்த இரண்டு வருடங்களுக்கு கண்காணிக்க முடியும் என்றும் அதற்குள் சந்திரயான் 4 திட்டம் செயல்படத் தொடங்கும் என்றும் எனவே அடுத்த 10 வருடங்களுக்குள் இந்தியாவின் நிலவை நோக்கிய கனவு மேலும் விரிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்