இடுக்கி மாவட்ட மீட்பு நிலங்கள் தோட்டதொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்படுமா?

இடுக்கி மாவட்ட மீட்பு நிலங்கள்  தோட்டதொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்படுமா?
X
இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் நிலங்களை, தமிழ் தோட்ட தொழிலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

கேரள மாநிலம், இடுக்கி மட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் நிலங்களை அப்பகுதியில் வசிக்கும் தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கேரள மாநில அரசுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்ட கோரிக்கையில் கூறியுள்ளதாவது:

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக இடுக்கி மாவட்ட நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரிடமிருந்தும் எந்த நிலத்தையும் அரசு கைப்பற்றவில்லை என்பது துரதிஷ்டம்.

இந்த நிலையில் தான் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கை உச்சத்திற்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில், கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா சார்ஜ், மூணாறு பகுதியில் மட்டும் 326 நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

தேவிகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னக்கானல் கிராமத்தில் மட்டும் 1700 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது சாந்தம்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பெரிய அளவிலான 100 நில ஆக்கிரமிப்புகள் தேவிகுளம், உடும்பஞ்சோலை மற்றும் பீர்மேடு தாலுகாக்களில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறி இருக்கும் இடுக்கி மாவட்ட ஆட்சியர், எவ்வித அனுமதியுமற்ற 500 கட்டுமானங்கள், உடும்பஞ்சோலை,தேவிகுளம் தாலுகாக்களில் வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உடும்பஞ்சோலை சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவருயான எம் எம் மணியினுடைய சகோதரர் எம்.எம். லம்போதரன் மட்டும் 105 ஹெக்டேர் நிலங்களை சின்னக்கானல் பகுதியில் கையகப்படுத்தி ஆக்ரமித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது போக sprit of Jesus என்கிற மதம் சார்ந்த நிறுவனம் சின்னக்கானல் பகுதியில் 129.48 ஹெக்டேர் நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதாக தெரிவித்த கலெக்டர் அதன் நிறுவனரான பாதர் டாம் ஜக்கரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கிடையே டாட்டா மற்றும் ஹரிசன் மலையாளம் லிமிடெட் உள்ளிட்ட தேயிலை கம்பெனிகளும் பெரிய அளவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்திருக்கும் முதல்வர் தூக்குபாறை, சூரியநெல்லி, பாறத்தோடு, மறையூர் பகுதிகளிலும் பெரியளவு ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

கேரள உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சப் கலெக்டர் தலைமையில் வருவாய் கோட்ட அலுவலர் அடங்கிய சிறப்பு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறது கேரள மாநில அரசு. இந்தக் குழு எடுக்கும் நடவடிக்கைக்கு இடுக்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முழு பாதுகாப்பு வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கூடுதலாக இந்த குழுவில் வனத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 10,000 எக்டேர்கள் வரை மீட்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உடும்பஞ்சோலை சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.மணி தெரிவித்திருக்கும் கருத்து, அரசுக்கு மறுபடியும் நெருக்கடியை உருவாக்கி விடுமோ என்ற அஞ்ச வேண்டியிருக்கிறது.

பல தசாப்தங்களுக்கு முன் கேரளாவின் உட்பகுதிகளில் இருந்து இடுக்கிக்கு இடம் பெயர்ந்த மக்கள் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் செயல்படும் வணிக நிறுவனங்களின் வாழ்க்கையில் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரிக்கும் மணி டாட்டா மற்றும் ஹாரிசன் மலையாளம் லிமிடெட் டின் அத்துமீறல்கள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு கேரள மாநில முதல்வராக இருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வி எஸ் அச்சுதானந்தன், இடுக்கி மாவட்ட நில ஆக்கிரமிப்பாளர்களை ஒடுக்குவதற்காக அமைத்த தவுத்திய சங்கம் என்ற அமைப்பையும் கடுமையாக எதிர்த்தவர் தான் இதே மணி.

அன்றைக்கு இடுக்கி மாவட்ட செயலாளராக இருந்த இந்த எம் எம் மணி, ஒரு கட்டத்தில் தவுத்திய சங்க அதிகாரிகளின் காலை உடைப்பேன் என்கிற அளவுக்கு பேசியதால் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. அன்றைக்கு கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், இன்றைக்கு முதல்வராக இருக்கும் தோழர் பினராயி விஜயன்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த குழு மோதலில் 2007 வரை அச்சுதானந்தனின் பக்கம் நின்ற இந்த எம் எம் மணி, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அச்சுதானந்தன் தீவிரப்படுத்தியதால், பின்னர் பினராயி பக்கம் தாவினார். தேவிகுளம் தாலுகாவில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்கிய, தேவிகுளம் சப் கலெக்டர்களாக பணி செய்த வி.ஆர். பிரேம்குமார், ஸ்ரீராம் வெங்கட்ராமன், சபின் சமித், டாக்டர் ரேணுராஜ் உள்ளிட்டவர்கள் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கடும் வசைச் சொற்களுக்கு ஆளானதோடு பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர். அதாவது 9 ஆண்டுகளில் 15 சப் கலெக்டர்களை தன்னுடைய அதிகார பலத்தால் தேவிகுளத்தில் இருந்து வெளியேற்றியது இடதுசாரி ஜனநாயக முன்னணி.

அதிலும் மூணாறு நகருக்குள் போடும் முதிரப்புழா ஆற்றில் அத்துமீறி கட்டப்பட்ட சிபிஎம் அலுவலகத்திற்கு ஸ்டாப் மெமோ வழங்கியதற்காக பதவியேற்ற பத்தாவது மாதத்தில் தூக்கி அடிக்கப்பட்டார் ரேணுராஜ் .இந்தக் கடுமையான சூழலில் நடவடிக்கைகள் தொடங்க இருப்பது வரவேற்புக்குரியது.

ஆனால் அரசு அதிகாரிகளுக்கு எதிராக உடும்பஞ்சோலை சட்டமன்ற உறுப்பினர் மணி விடுத்து வரும் வார்த்தைகளை அரசு கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசு தயாராக வேண்டும். இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடுநிலை தவறாதவர். தைரியம் நிறைந்த போலீஸ் அதிகாரி என்பதால், அரசின் நடவடிக்கைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுப்பார் என்று நம்புகிறோம்.

இறுதியாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கையகப்படுத்தும் நிலங்களை, அந்த பூமியில் 140 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும், அந்த பூமிக்கு சொந்தக்காரர்களாகிய அப்பாவி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1956 க்கு முன்பு அந்த பூமியில் வாழ்ந்தவர்களை வகைப்படுத்தி, தலா மூன்று ஏக்கர் வீதம் அவர்களுக்கு ஒதுக்குவதற்கு கேரள மாநில நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும். இந்தக் கருத்து என்னுடைய கருத்தாக இருந்தாலும், இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் இடுக்கி மாவட்ட செயலாளர் கே. கே. சிவராமனும் வழிமொழிந்திருப்பதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் மீட்கப்படும் ஆக்கிரமிப்பு நிலங்களை தமிழ் தேயிலைத்தோட்ட தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கான இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசும் முயற்சி மேற்கொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!