முன்னாள் முதல்வர் தொகுதியில் பரிதவிக்கும் பொதுமக்கள்
தேனி அருகே முன்னாள் முதல்வர் தொகுதியான போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் அரசு பஸ் வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் மினி பஸ்கள் வசூலை வாரிக் குவிக்கின்றன.
தேனி அருகே கொட்டகுடி ஆற்றுப்பாலத்தில் இருந்து கோடாங்கிபட்டி செல்லும் தார்ரோடு பிரிந்து செல்கின்றது. இந்த ரோட்டில் ஆதிபட்டி, பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, வளையபட்டி, கோடாங்கிபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளனர். இவர்கள் கல்வி, மருத்துவம், தொழில், வேலை வாய்ப்பு, வணிகம் உட்பட ஒட்டுமொத்த வாழ்வாதாரத்திற்கும் தேனி நகருக்கு தான் வர வேண்டும். ஆனால் தேனியில் இருந்து இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இல்லை. இந்த கிராமங்கள் எல்லாமே முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., எம்.எல்.ஏ.,வாக உள்ள போடி சட்டமன்ற தொகுதிக்குள் வருகின்றன.
முன்னாள் முதல்வரே தங்கள் தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாக இருப்பதால் எல்லா வசதிகளும் கிடைத்து விடும் என்ற நம்பிய மக்களுக்கு இதுவரை பஸ்வசதி கூட கிடைக்கவில்லை. இந்த வழித்தடத்தில் நான்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் பராமரிப்பு இல்லாமல், ஓட்டை உடைசலுடன் காணப்படுகின்றன. இப்பகுதி மக்கள் இந்த பஸ்களையே தங்கள் பயணத்திற்கு நம்பி உள்ளனர். அரசு பஸ்கள் எப்போதாவது ஒருமுறை இயக்கப்பட்டாலும் மக்களை முறையான இடங்களில் ஏற்றி இறக்குவதில்லை.
அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களே மக்கள் கேட்கும் இடங்களில் எல்லாம் பஸ் நிற்காது ஏறாதே என்று கூறி இறக்கி விட்டு விடுகின்றனர். இதுவும் மினி பஸ்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. மினி பஸ்கள் மக்களை நினைத்த இடத்தில் இறக்கி ஏற்றுகின்றனர். இதனால் தனியார் மினி பஸ்கள் வசூலை வாரிக்குவிக்கின்றன. மொத்தமாக அரசு பஸ்கள் மினி பஸ்களுக்கு உதவும் வகையில் செயல்படுகின்றன என்று நினைக்கவே தோன்றுகிறது. மாவட்ட போக்குவரத்திற்கு தலைமை அதிகாரி பொறுப்பில் உள்ள கலெக்டர் ஷஜீவனா இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu