தேனி நகராட்சி தலைவர் பதவியை ரேணுப்பிரியா தக்க வைத்ததன் அரசியல் பின்னணி

தேனி நகராட்சி தலைவர் பதவியை ரேணுப்பிரியா தக்க வைத்ததன் அரசியல் பின்னணி
X
தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா.
தேனி நகராட்சி தலைவர் பதவியை ரேணுப்பிரியா தக்க வைத்ததன் அரசியல் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேனி நகராட்சி தலைவராக இருக்கும் ரேணுப்பிரியா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். நகராட்சி தலைவர் தேர்தலின் போது தேனி நகராட்சி தலைவர் பதவி எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் கட்சிக்கு என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கடும் போட்டியை எதிர்கொண்டு தேர்தலில் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற ரேணுப்பிரியாவும், அவரது கணவர் பாலமுருகனும் கட்சியின் கட்டளையை மீறி பதவியை பிடிப்பதிலேயே குறியாக இருந்து அதனை பிடித்தும் விட்டனர்.

தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரேணுப்பிரியாவை வீழ்த்த நாயுடு சமூகத்தை சேர்ந்த அபரிமிதமான செல்வாக்கு மிகுந்த குடும்பத்தை சேர்ந்த சற்குணம் என்ற பெண் போட்டிக்கு களம் இறங்கி பகீரத பிரயத்தனம் செய்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. இதன் பின்னணியில் நடந்த திரைமறைவு அரசியல் காட்சிகள் தற்போது வெளி வர தொடங்கி உள்ளன.

தேனி நகராட்சி தலைவர் பதவி முதன் முறையாக நாயுடு சமூகத்தை சேர்ந்த பெண்ணிற்கு கிடைத்துள்ளது. அதற்கு எதிராக நாயுடு சமூகத்தை சேர்ந்த பெண்ணே களம் இறங்குவார் என அச்சமூக பிரமுகர்கள் ஒரு துளி கூட எதிர்பார்க்கவில்லை. இரண்டு பேருமே தங்களுக்கு தேவை என்ற நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக பதவி வேறு சமூகத்திற்கு போய் விடக்கூடாது என்பதில் நாயுடு சமூகத்தின் அத்தனை பிரிவு தலைவர்களும் மிகவும் கவனமாகவும் ஒற்றுமையுடனும் செயல்பட்டனர்.

இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா வரை தங்கள் சமூகத்தில் உள்ள அத்தனை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தனர். இப்பிரச்சினையை எப்படியும் சுமூகமாக முடிக்க வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டினர். அதேபோல் இப்பிரச்சினை நாளுக்கு நாள் வலுக்க அதனை அந்தந்த சூழலுக்கு ஏற்ப முறியடிக்க தேவையான பணத்தையும் கணக்கின்றி வாரி இறைத்தனர். இரு பெண்களும் காங்.,- தி.மு.க., என களம் இறங்கி மோதுவதால் நாயுடு சமூக தலைவர்கள் திரைமறைவில் காங்., கட்சி தலைவர்கள் இ.வி.கே.எஸ்., இளங்கோவன், திருநாவுக்கரசர், அழகிரி, தமிழக முன்னாள் தலைமை செயலாளர், தி.மு.க.,வின் சார்பில் எ.வ.,வேலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என பெரும் தலைகளை சந்தித்து இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு காண அன்பான வேண்டுகோள் வைத்தனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளரை சமரசம் செய்ய இ.வி.கே.எஸ்., இளங்கோவன் தேனிக்கு வந்திருந்தார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் சற்குணத்தையும், அவரது மகன் டாக்டர் தியாகராஜனையும் சந்தித்தார். அவருடன் நாயுடு சமூகத்தின் முக்கிய தலைவர்களும் சந்தித்தனர். உங்கள் அரசியல் எதிர்காலத்தை எம்.எல்.ஏ., எம்.பி., என நோக்கி பயணப்படுத்துங்கள். அதற்கும் நாங்கள் உதவி செய்கிறோம். ரேணுப்பிரியா பாலமுருகனுக்கு இனி தொல்லை தராதீர்கள் என பேசி சம்மதிக்கவும் வைத்து விட்டனர்.

இவர்களின் முயற்சி பலித்தது. தி.மு.க., மேலிடம் தனது பிடிவாதத்தை தளர்த்தி, தேனி நகராட்சியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி நெருக்கடி அளிக்காமல் ரேணுப்பிரியாவின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சிக்னல் கொடுத்து உள்ளது. இது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் ரேணுப்பிரியாவிற்கு வி.ஐ.பி., பாஸ் வழங்கி, நகராட்சி தலைவருக்கான இருக்கையும் வழங்கி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

ஆக தேனி நகராட்சியை பொறுத்தவரை கடந்த இரண்டு மாதங்களாக பற்றி எரிந்த நகராட்சி தலைவர் பதவி பிரச்சினை கிட்டத்தட்ட நுாறு சதவீதம் முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. இந்த இரண்டு மாதங்களும் இந்த பதவியை தக்க வைக்க ரேணுப்பிரியாவும், அவரது கணவர் பாலமுருகனும் கடும் போராட்டம் நடத்தினாலும், அவர்கள் வெற்றி பெற மிக, மிக முக்கிய காரணமாக நாயுடு சமூகத்தின் அத்தனை பிரிவு தலைவர்களின் ஒற்றுமையும், உதவியும், ஒருமித்த செயல்பாடுமே உதவிக்கு நின்றது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.


இந்த விஷயத்தில் நாயுடு சமூக மக்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை நிரூபித்து, தேனியின் அரசியல் அதிகாரத்தை இம்முறை கைப்பற்றியதை அரசியல் நோக்கர்கள் அச்சமூக தலைவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.என்றே விமர்சிக்கின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!