குமுளியை முற்றுகையிட சென்ற விவசாயிகளை தடுத்த நிறுத்திய போலீசார்
பெரியாறு அணைக்கு பதிலாக மாற்று அணை கட்ட கேரளா திட்டமிட்டு செயல்பட்டு வருவதை கண்டித்து பெரியாறு அணை பாசன விவசாயிகள் சங்கம் இன்று குமுளியை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். இன்று காலை 10 மணி முதல் லோயர்கேம்ப்பில் ஒன்று திரண்டனர். நுாற்றுக்கணக்கான தமிழக நிருபர்களும், கேரள நிருபர்களும் இந்த போராட்டத்தை சேகரிக்க வந்தனர். பல தமிழக சேனல்களும், கேரள சேனல்களும் இந்த போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
விவசாயிகள் லோயர்கேம்ப்பில் அமர்ந்து கேரள அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் குமுளி நோக்கி சென்றனர். லோயர்கேம்ப்பில் இருந்து பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுவிக் நினைவு இடம் வரை விவசாயிகள் பேரணியாக செல்ல அனுமதித்த போலீசார், அதற்கு மேல் செல்ல விடாமல் விவசாயிகளை தடுத்தனர். உங்கள் கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கலைந்து செல்லுங்கள். உங்களை இதற்கு மேல் குமுளி நோக்கி செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் தடுத்தனர்.
போலீசாரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் அங்கேயே அமர்ந்து கேரள அரசுக்கு எதிராக கோஷமிட்ட பின்னர், தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பெரியாறு அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள், நீர் தேக்கப்பகுதிகள் தொடர்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும், கேரள அரசுக்கும் இடையே 999 ஆண்டு செட்டில்மெண்ட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில்மெண்டில் உள்ள ஷரத்துக்களை யாராலும் நீக்கவோ, மாற்றி அமைக்கவோ முடியாது. எனவே இந்த செட்டில்மெண்ட்டில் கூறப்பட்டுள்ள விஷயங்களை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். கேரளாவில் கம்யூஸ்னிட் அரசுகள் வந்தாலும், காங்., அரசு வந்தாலும், பெரியாறு அணை விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர்.
கேரள மக்களும், தமிழக மக்களும் மிகுந்த நட்புடன் உள்ளனர். கேரள மக்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். அதேபோல் கேரள மக்களும் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். கேரள மக்கள் அங்கு முல்லைப்பெரியாறு தொடர்பாக நடக்கும் எந்த விஷயத்தையும் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு பெரியாறு அணை பலமாக உள்ளது நன்றாகவே தெரியும்.
இந்திய தொழில்நுட்ப வல்லுநர் குழு மிக உயரிய அளவில் பரிசோதனை செய்து அணை பலம், பாதுகாப்பு பற்றி உறுதி அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்துள்ளது. இருப்பினும் கேரள அரசு தேவையில்லாத பிரச்னைகளை கிளப்பி நாடகமாடி வருகிறது. நாங்கள் கேரள அரசினை கண்டித்து தான் போராட்டம் நடத்துகிறோம். எங்கள் போராட்டம் கேரள மக்களுக்கு எதிரானது இல்லை.
மத்திய அரசும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் கேரள அரசின் நயவஞ்சக திட்டத்திற்கு துணை போக கூடாது. கேரள அரசினை கண்டித்து பெரியாறு அணையின் துணை அணையான பேபி அணையினை பலப்படுத்த அனுமதிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். அணையில் 152 அடி நீர் தேக்கவும் அனுமதிக்க வேண்டும். தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu