கொரோனா தடுப்பூசி திறனில்லை என்பதுதான் சீன மக்கள் போராட்டத்துக்கு காரணமா ..?
பைல் படம்
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் பாதிப்பு சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பினை உருக்கியது. கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பரவி கணக்கிடமுடியாத பேரழிவை ஏற்படுத்தியது. அனைத்து உலக நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்களையும் வல்லரசு நாடுகளால் கூட கணக்கெடுக்க முடியவில்லை. அத்தனை கோடிப்பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பல கோடிஉயிர்களை இந்த வைரஸ் காவு வாங்கியது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக மக்களை பாதுகாக்க அத்தனை நாடுகளும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தடுப்பூசிகளை தயாரித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சொந்தமாக தடுப்பூசிகளை தயாரித்தன. இந்தியாவின் தடுப்பூசி உலகில் 70 நாடுகளுக்கு சப்ளை செய்யப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளின் தடுப்பூசிகளை பயன்படுத்திய நாடுகள் அனைத்தும் கொரோனா பிடியில் இருந்து மீண்டு விட்டன.
இந்த நிலையில், சர்வதேச கொரோனா தடுப்பூசிகளான மாடர்னா மற்றும் பைசர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு சீனா மறுத்து விட்டது. அதற்கு பதிலாக உள்நாட்டிலேயே தயாரான சினோவேக் என்ற பெயரிலான தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டது.ஆனால், சினோவேக் நிறுவனம் டி-செல் தடுப்பூசிகளை உருவாக்கியது. அவற்றால், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்க முடியவில்லை. இந்த தடுப்பூசிகள் செயல் திறன் குறைந்தவைகள் என இப்போது வரை உறுதியாகி உள்ளது.
இதனால் சமீப நாட்களாக சீனாவில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. நாள்தோறும் 30 ஆயிரம் பேர் வரை புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் எண்ணிக்கை பற்றிய தரவுகளை மறைப்பதிலும், சர்வதேச அளவில் தனது தடுப்பூசிகளை விற்பதிலும் மட்டுமே சீனா தீவிர கவனம் செலுத்தி வந்தது. தடுப்பூசிகளின் தரத்தில் எந்த கவனமும் செலுத்தவில்லை. இதுவே சீனாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என தி சிங்கப்பூர் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா மற்றும் பிரேசில் நாடுகளும், சீனா வழங்கிய தடுப்பூசிகள் திறனுடன் உள்ளன என முதலில் நம்பின. பின்னர் அதன் உண்மைத் தன்மை அறிந்து பின்வாங்கின. தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகள் சீன தடுப்பூசிகளை விட்டு விட்டு, தனது மக்களுக்கு ஆஸ்டிராஜெனிகா தடுப்பூசிகளை செலுத்துவதில் கவனம் செலுத்தின. மலேசியாவும் பைசர் தடுப்பூசிகளுக்கு விரைவாக மாறியது. இதுபோன்று சர்வதேச அளவில் சீன தடுப்பூசிகளின் திறனற்ற நிலை குறித்து வெளியுலகிற்கு தெரிய வந்தபோதிலும், உள்நாட்டிலேயேயும் அதன் பயன்பாடு மக்களால் எதிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது கொரோனா பரவல் சீனாவில் அதிகம் இருப்பதாலும், இதனை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு குழப்பமான நிலையே காணப்படுகிறது. இந்த தகவலை எதையும் சீன அரசு வெளி உலகுக்கு கசிய விடாமல் பாதுகாப்பதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் போராட்டத்தை சீனா அடக்க பகீரதபிரயத்தனம் செய்து வருகிறது. எனினும், கொரோனா தடுப்பூசி தரமாக மக்களுக்கு வழங்கினால் மட்டுமே இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ள கருத்துகளை மறுப்பதற்கில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu