ஒரு மாதம் நடந்த போராட்டத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்தது நுாறுநாள் வேலை பிரச்னை
தேனி மாவட்டம் முழுவதும் ஒரு மாதத்திற்கு மேல் நடந்த போராட்டத்திற்கு பின்னர், நுாறுநாள் வேலை பிரச்னை முடிவுக்கு வந்தது. தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம நுாறுநாள் வேலை உறுதி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் 500க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் சராசரியாக தினமும் ஒரு கிராமத்தில் 175 முதல் 225 பேருக்கு வேலை வழங்கப்படுகிறது. இவர்களை வேலை வாங்குவதற்கு என பணித்தள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை இவர்கள் காலை 9 மணிக்கு பணிக்கு வந்து பிற்பகல் 2 மணி வரை பணியில் ஈடுபட்டு வந்தனர். சராசரி சம்பளம் ஒவ்வொருவரின் பணித்திறனுக்கு ஏற்ப 200 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட மாநிலம் முழுவதும் இதே நிலை தான் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் அரசு வெளியிட்ட உத்தரவில் கிராம நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் தினமும் காலை 8 மணிக்கு பணி நடைபெறும் இடத்திற்கு வந்து விட வேண்டும். மாலை 5 மணி வரை வேலை செய்ய வேண்டும். மதியம் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை எடுத்துக் கொள்ளலாம் என கூறியிருந்தது. இதற்கு நுாறுநாள் வேலை திட்ட பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கிராம ஊராட்சி தலைவர்களும் இந்த விஷயத்தில் கடும் பிரச்னை செய்தனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்- கிராம ஊராட்சி தலைவர்கள்- நுாறுநாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் மீண்டும், மீண்டும் பலமுறை கூடிப்பேசினர்.
முடிவில் காலை 8.30 மணிக்கு பணி நடைபெறும் இடத்திற்கு வந்து விட வேண்டும். பிற்பகல் 3.30 மணி வரை வேலை செய்ய வேண்டும். மதியம் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். சம்பளம் தற்போது வழங்கப்படும் 220 ரூபாயினை கூடுதலாக அதிகரித்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவினை மூன்று தரப்பினரும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்று வந்த கிராம நுாறு நாள் வேலை திட்ட பிரச்னை முடிவுக்கு வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu