சிறுமியை நிலாப் பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலாப்பெண்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாத பௌர்ணமி நாளன்று நிலாப் பெண் வழிபாடு நடைபெறுகிறது.
ஒரு வாரத்துக்கு முன்பு ஊர் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதி, குலுக்கல் முறையில் நிலாப் பெண்ணை தேர்வு செய்கின்றனர்.
தேர்வு செய்யப்படும் சிறுமிக்கு கிராமத்தில் உள்ள பலரும் தங்களது வீடுகளில் இருந்து பால், பழம் உள்ளிட்ட உணவுகளை கோயிலில் வைத்து வழங்குகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா தை மாத பௌர்ணமி நாளான நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நிலாப்பெண்ணாக இந்த ஆண்டு கார்த்திகேயன்- மேகலா தம்பதியின் 10 வயது மகள் சர்வ அதிர்ஷ்டா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், இச்சிறுமியை கிராமத்தில் உள்ள மாடச்சி அம்மன் கோயிலுக்கு தாரை, தப்பட்டை முழங்க பெண்கள் அழைத்து வந்தனர். சிறுமிக்கு ஆவாரம் பூ மாலையிட்டு ஆவாரம் பூக்கள் அடங்கிய கூடையை தலையில் வைத்து கோயில் முன் அமர வைத்து கிராமப் பெண்கள் பாட்டு பாடி கும்மியடித்து, குலவையிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.அதிகாலையில் நிலா மறையத் தொடங்கும் நேரத்தில் சிறுமி கொண்டு வந்த ஆவாரம்பூ கூடையில் தீபச் சட்டியை வைத்து, தீபம் ஏற்றி அதனை நீர் நிரம்பிய கிணற்றில் மிதக்க விட்டு அம்மனை வணங்கி வீடு திரும்பினர்.
இதுகுறித்து கிராமப் பெண்கள் கூறுகையில், நிலாப் பெண் வழிபாடு வழக்கம் எங்கள் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக தைப்பூச பவுர்ணமி அன்று இரவில் நடந்து வருகிறது. எங்கள் முன்னோர் சொன்ன வழக்கப்படி நிலாப்பெண் வழிபாட்டை தொடர்ந்து செய்து வருகிறோம். அடுத்த தலைமுறையும் தொடரச் செய்வோம். இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது எங்களது நம்பிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu