ஆம்புலன்சை வழியில் நிறுத்தி நோயாளியுடன் மது அருந்திய ஓட்டுநர்
நோயாளியுடன் மது அருந்தும் ஆம்புலன்ஸ் டிரைவர்.
சமூக வலைதளங்களில் குடிமகன்களை பற்றிய தகவல்கள் வராத நாளே இல்லை. தினம் தினம் குடிமகன்கள் ரோட்டில் டான்ஸ் ஆடுவது, போதையில் மழை நீரில் தள்ளாடி விழுவது, வாகனத்தில் செல்லும் போது விழுவது, சாக்கடைக்குள் விழுந்து கிடப்பது போன்ற வீடியோக்கள் வெளியாக ஒரு கலகலப்பை உருவாக்கி வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்து மக்கள் சிரித்தாலும், குடிமகன்கள் வாழ்க்கை இப்படி சீரழிகிறதே என்ற வருத்தமும் உண்டு.
தேனி மாவட்டத்தில் ஒரு நகராட்சியில், குடிபோதையில் ஒரு குடிமகன், ரோட்டில் வைத்து தனது மனைவியுடன் தகராறு செய்து மனைவியின் கழுத்தை கத்தியால் அறுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற போலீஸ்காரர்கள் அந்த பெண்ணை காப்பாற்றினர். பின்னர், அந்த குடிமகன் தான் பெற்ற மகளின் கையை கடித்து பலத்த காயம் ஏற்படுத்தினார்.
இரவில் இந்த சம்பவம் நடந்ததாலும், குடிமகன் உச்சகட்ட போதையில் இருந்ததாலும், அவரை கைது செய்ய முடியாமல் பரிதவித்த போலீசார், இரவு முழுவதும் குடிமகனின் மனைவியையும், மகளையும் படாத பாடுபட்டு பக்கத்து வீடுகளில் சொல்லி வைத்து பாதுகாத்து, காலையில் குடிமகனை தங்கள் பாணியில் 'அறிவுறுத்தி' அனுப்பி வைத்தனர். இப்படி தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை ஸ்டேஷன்களிலும் குடிமகன்களால் தினமும் ஏதாவது பிரச்னை வந்து கொண்டே உள்ளது. இதெல்லாம் என்ன ஜூஜூபீ எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள் என்கின்றனர் ஒடிசா மக்கள். அங்கு நடந்த குடி சம்பவம் தான் தற்போதைய ஹைலைட் செய்தி.
ஒடிசாவில், சாலை விபத்தில் காயம் அடைந்த நபரை ஏற்றிக் கொண்டு, ஜகத்சிங்பூரின், திர்தால் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலை வழியாக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. வழியில் மதுக்கடை அருகே ஆம்புலன்ஸ் நின்றது.
அதில் இருந்து இறங்கி வந்த ஓட்டுனர் மது வாங்கி சென்றார். ஆம்புலன்சில் ஏறியதும் பாட்டிலை திறந்து மது அருந்தினார். காலில் காயத்துடன் கட்டுப்போட்டு படுத்திருந்த நபருக்கு ஒரு, 'பெக்' ஊற்றிக் கொடுத்தார். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள், 'மொபைல் போனில்' படம் பிடித்தனர். இது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
ஆம்புலன்சில் காயம் அடைந்த நபருடன், ஒரு பெண்ணும், குழந்தையும் இருந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பொது மக்கள் கண்டித்த போது, நோயாளி தான் மது கேட்டதாக அவர் தெரிவித்தார்.
''இது தனியார் ஆம்புலன்ஸ் என்பதால், மண்டல போக்குவரத்து அதிகாரியும், போலீசாரும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஜகத்சிங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஒதுங்கிக் கொண்டார்.
''இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. வழக்கு பதிவு செய்யாமல் விசாரிக்க முடியாது. இது போன்று தினமும் பல சம்பவங்கள் நடக்கிறது. குடிமகன்களின் பிரச்னைகளை கட்டுப்படுத்த வழக்கு பதிவு செய்தால், மாநில போலீஸ் ஸ்டேஷன்கள் தாங்காது. என்ன செய்ய முடியும்'' எனக்கூறி போலீசாரும் நழுவினர். யாருமே இதனை கண்டு கொள்ளாததால், பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu