விபத்தில் அதிபர் மரணம்...இனி என்ன ஆகும் ஈரான்?
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த சந்தேகத்தில் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரான் பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது.
இந்த முறை வீழ்ந்து விடுமா?
ஈரான் நாட்டில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் நடக்கும்போதும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்பார்ப்பு இப்படித்தான் இருக்கிறது. ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்திருக்கும் இந்தத் தருணத்திலும் அதே எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது.
மன்னராட்சிக்கு எதிராக கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி நடத்தப்பட்டு ஈரானில் ஆட்சி மாறியது. அன்று முதல் கடந்த 45 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு முள்ளாக உறுத்திக்கொண்டிருக்கும் நாடு இரான்.
இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி அங்கு நடைபெற்றுவருகிறது. அதிபர் ஆட்சி செய்வதாகக் காட்டிக்கொண்டாலும், பெரும்பான்மையாக இருக்கும் ஷியா இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்ட நிர்வாக சபையே நாட்டை ஆள்கிறது. நாட்டின் உச்சத் தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி காமெனி அந்த சபைக்குத் தலைவர். மதம், அரசாங்கம், நீதித்துறை, ராணுவம் என்று எல்லாமே அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் ஒரு விநோத அமைப்பு அது.
உச்சத் தலைவர் கையில் லகான் இருந்தாலும் அவரை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். மக்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அதிபரைத் திட்டுவார்கள். இப்படி தன்மீதான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் ஒரு பாதுகாப்புக் கவசம் போலவே அதிபரை வைத்திருப்பார் உச்சத் தலைவர்.
தற்போதைய உச்சத் தலைவர் காமெனிக்கு 85 வயதாகிறது. அவருக்குப் பிறகு அந்த இடத்தை அடைய வேண்டியவராக அறியப்பட்டவர் இப்ராஹிம் ரைசி. காமெனி போலவே அமெரிக்க வெறுப்பைத் தீவிரமாகப் பின்பற்றியவர். கடந்த மாதம் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியது. அதற்கு பதிலடியாக சமீபத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியவர். அதனால் போர் மூளும் அபாயம் இருந்த போதும் கவலைப்படவில்லை.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த சந்தேகத்தில் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு என்று மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.
இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராட்டம்கூட நடத்தமுடியாத நிலை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, மக்கள் பெரிய அளவில் கிளர்ந்து எழுந்தனர். அது உரிமைக்கான போராட்டம் என்பதைவிட, சகித்துக்கொள்ள முடியாத வாழ்க்கைச்சூழலிலிருந்து விடுபடுவதற்கு இளைய தலைமுறை நடத்திய போராட்டம் என்று சொல்லலாம். அந்தப் போராட்டத்தின் பின்னணியில் மேற்கத்திய சக்திகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி, நூற்றுக்கணக்கானோரைக் கொன்று அந்தப் போராட்டத்தை ஒடுக்கினார் ரைசி.
ரைசியின் மரணத்துக்குக்கூட மறைமுகமாக இந்தத் தடைகளே காரணம் எனலாம். ஈரானிடம் இருக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என்று பலவும், புரட்சிக்கு முன்பு அந்த நாடு வாங்கியவை. அவற்றைப் பராமரிக்கவோ, புதுப்பிக்கவோ அந்த நாட்டிடம் தொழில்நுட்பங்கள் இல்லை. அப்படி ஓர் அரதப்பழசான ஹெலிகாப்டரில் பயணம் செய்தே இறந்திருக்கிறார் ரைசி.
என்னதான் ரைசி வெளிப்படையாக மேற்கத்திய எதிர்ப்பு பேசினாலும், ஈரானை ஒரு முக்கியமான சக்தியாக உலக அரங்கில் முன்னிறுத்த முயன்றார். உலகின் முக்கியமான சக்திகளால் ஒதுக்கப்பட்ட ஒரு தேசமாக இத்தனைக் காலம் ஈரான் இருந்தது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமனில் ஹூதி அமைப்பு என பல தீவிரவாத அமைப்புகளுக்கு மறைமுகமாக நிதியும் ஆயுதமும் அளிப்பதால் ஈரானை அரபு நாடுகளே வெறுத்தன.
இந்த சூழலில், அணு ஆயுதம் தயாரிக்கும் வல்லமையை ஈரான் பெற்றிருப்பதை உணர்த்தி, அமெரிக்காவுடன் ஒரு திரைமறைவுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் ரைசி. இன்னொரு பக்கம் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு ட்ரோன்களை அளித்து அந்த நாட்டுடன் நெருக்கமானார். பரம விரோதியான சவூதி அரேபியாவுடனும் நெருங்க முயன்றார்.
இந்தியாவுக்கும் அவர் நெருக்கமான நண்பனாக இருந்தார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி முயற்சியில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் ஈரானை இந்தியா இணைத்தது. இதேபோல, பிரிக்ஸ் கூட்டமைப்பிலும் ஈரானை இணைக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது.
ஈரானின் சபஹார் துறைமுகத்தை ஒப்பந்த முறையில் இந்தியாவுக்கு அளித்தார் ரைசி. மும்பையில் தொடங்கி இந்தியாவின் மேற்குக்கரை வழியாக அரபு நாடுகளைத் தாண்டி ஐரோப்பா வரை செல்லும் கப்பல் பாதையில் முக்கியமான துறைமுகம் அது. இந்தியாவுக்கு அது கிடைத்தால் இந்தக் கடல் போக்குவரத்தில் இந்தியா வல்லமைமிக்க ஒரு இடத்தில் இருக்கும். இதற்கான ஒப்பந்தம் மே 13-ம் தேதிதான் கையெழுத்தானது. அப்போதே அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அடுத்த ஒரு வாரத்திலேயே ரைசியின் மரணம் நிகழ்ந்திருப்பது துயரம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu