வியக்க வைக்கும் நரிக்குறவர் இனமக்கள்: கலாசாரம்.. தனித்தன்மை.. மேன்மை..!
கோயில் அன்னதானத்திலிருந்து அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட பெண்ணுடன் உணவருந்தும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு.
நரிக்குறவர் இன மக்கள் அதி அற்புத வியாபார திறமையும், எந்த பருவநிலையையும் தாங்கக்கூடிய உடல வலிமையைக் கொண்டவர்கள். கஞ்சா, மது, சினிமா போன்ற போதைக்கு அடிமையாகாதவர்களும் இவர்கள்தான்.
நரிக்குறவர் (இப்படி வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. ஆனால் அவர்களை அடையாளப்படுத்த தற்போது வேறு வார்த்தை கிடைக்கவில்லை). இந்த இனத்தைச்சார்ந்த பெண் ஒருவரை கோயில் அன்னதானத்தில் சாப்பிட விடாமல் தடுத்து அதிகாரிகள் வெளியேற்றிய சம்பவம் தமிழக மக்களையும் சமூக நீதி ஆர்வலர்களையும் கொந்தளிக்க வைத்து விட்டது. சமூக வலைதளங்களில் எழுந்த கடும் கண்டனத்தை உணர்ந்த தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை அனுப்பி, அந்த பெண்ணுடன் அமர்ந்து கோயிலில் அன்னதானம் சாப்பிட்டு இந்தப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
தமிழக மக்களிடம் எழுந்த கோபம் உண்மை தான். இதற்கு காரணமான அரசு அதிகாரிகளுடன் ஒப்பிடுகையில், நரிக்குறவர் இனமக்களின் சிறப்புகளை விவரிக்கவே முடியாது. அந்த பெண் கூறியதை போல் தற்போது அவர்களும் தினமும் குளித்து உடை மாற்றி சுத்தமாகத்தான் இருக்கிறார்கள். இவர்களின் ஒழுக்கம் மிகுந்த வாழ்வு அற்புதமானது.
இவர்களிடம் குவிந்து கிடக்கும் பல அற்புத விஷயங்களை வரிசைப்படுத்தி பார்ப்போம்...
இந்த இன மக்களில் குடிக்கு அடிமையானவர்கள், தெருவில் குடித்து விட்டு படுத்து கிடப்பவர்கள் என யாரையும் பார்க்க முடியாது. அதேபோல் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களும் இவர்கள் கூட்டத்தில் இல்லை. இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் சினிமாவிற்கு அடிமையாகி ரசிகர் மன்றம் (சினிமா பார்ப்பது வேறு, அடிமையாவது வேறு) வைப்பது இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இவர்களுக்கு பிடித்த சினிமா பிரபலங்கள். இதெல்லாம் பழைய காலம். இப்போது 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை' என்பதே இவர்களின் நிலைப்பாடு.
இந்த கூட்டத்தில் கரை வேட்டிகளை பார்க்க முடியாது. இவர்களை பொறுத்தவரை ஓட்டுக்கு காசு வாங்குவது கூட அபூர்வமான விஷயம் தான். இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் திருட்டு குற்றம், வழிப்பறி, பாலியல் குற்றம் உட்பட எந்த வித சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டதாக போலீஸ் பதிவேடுகளி்ல் ஆதாரங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் மற்ற இனக்குழுக்களுடன் ஒப்பிடுகையில் இவர்களின் சதவீதம் மிக, மிக குறைவு என்பது அத்தனை போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரியும். இவர்கள் எவ்வளவு ஏழ்மையில் வாழ்ந்தாலும் பிச்சையெடுப்பதை பார்ப்பது மகவும் அரிது. கடந்த இரண்டுகால கொரோனா முடக்கத்தால் அந்த நிலைக்கு ஒரு சிலர் தள்ளப்பட்டிருக்கலாம். இதுவரை இந்த இன மக்களில் பிச்சைக்காரர்களை பார்த்து இருக்க மாட்டார்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என வாழும் இவர்கள் வீண் தகராறுகளில் ஈடுபட்டு ,போலீஸ் பஞ்சாயத்துக்கு சென்றதே இல்லை. இதுவரை ஜாதி மோதலில் இக்கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதே இல்லை. இவர்களுக்குள் அடித்துக் கொள்வது தினமும் நடக்கும். ஆனாலும் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் அளவு மோதலில் ஈடுபட்டதில்லை.
அதேபோல் இந்த இனமக்கள் ஆரோக்கியமற்ற வாழ்வு வாழ்வதாக மற்றவர்களிடம் புகார் எழுந்துள்ளது. ஆனால் இவர்களை சிகிச்சைக்காக எந்த மருத்துவமனையிலும் பார்ப்பது மிக, மிக அபூர்வமான விஷயமாகவே இருக்கும். அதாவது எப்போதாவது ஒருமுறை காட்டுக்குள் இருக்கும் விலங்குகள் ஊருக்குள் வருவதைப் பார்ப்பது போன்றே அபூர்வமாக இவர்களை மருத்துவமனைகளில் பார்க்க முடியும். அப்படியானால் இந்த இன மக்களின் வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளையும் சுத்தம் சுகாதாரத்தை எப்படி குறை சொல்ல முடியும்.
தவிர மழை, பனி, வெயில், பகல், இரவு என எந்த பருவநிலை சூழலும் இவர்களை பாதிப்பது இல்லை. மழையில் நனைந்து கொண்டே உறங்குவது இவர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயம். அதேபோல் இவர்களுக்கு வசதியான வீடுகள் இருந்தாலும் வெட்டவெளியில்தான் உறங்குவார்கள்.இந்த அடிப்படை வசதியைக்கூட விரும்புவதில்லை.
தற்போது வியாபாரத்திற்கு வரும் இவர்கள் பெரும்பாலும் பஸ்ஸ்டாண்ட்களுக்கு அருகே, அல்லது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் ஏதாவது தெரு ஓரத்தில் மட்டுமே அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். அபூர்வமாக சிலர் மட்டுமே பெட்டிக்கடை போல் வைத்திருப்பார்கள். ஊசி, பாசி, சீப்பு, பிளாஸ்டிக் பொருட்கள், சாமி மாலைகள், ஸ்படிக மாலைகள், ருத்ராட்ச மாலைகள், சாமி படங்கள் போன்ற பக்தி மிகுந்த விஷயங்கள் தான் இவர்களின் முக்கிய வியாபாரம் ஆகும்.
இதில் பெரும்பாலும் போலிகள் இருப்பதில்லை. காரணம் இவர்கள் இந்த பொருட்களில் பெரும்பாலானவற்றை காசியில் சென்று வாங்குகின்றனர். குறிப்பாக தேனியில் வியாபாரம் செய்பவர்கள், இங்கிருந்த 5 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள காசிக்கு ரயிலில் சென்று (விமானத்தில் செல்பவர்களும் உண்டு) இந்த பொருட்களை வாங்கி வருகின்றனர். அதாவது தெருவோரம் கடை வைத்து தெருவில் பரப்பி விற்கும் பொருட்களை கூட இவர்கள் 5 ஆயிரம் கி.மீ.,பயணித்து வாங்கி வருகின்றனர் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும். இவர்களின் வியாபார நேர்மைக்கு வேறு உதாரணம் தேவையில்லை.
ரயில் பயணம் மட்டுமல்ல, அதிகளவில் விமானங்களில் பறப்பதும் இவர்கள் தான். காசியில் இருந்து ஸ்படிகமாலை, ருத்திராட்ச மாலைகள், அன்னபூரணி சிலைகள், தவிர பல்வேறு பாசி மாலைகளை வாங்கிச் சென்று மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மியான்மர் என கிழக்காசிய நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்கின்றனர். அங்கும் சாலையோர வியாபாரம் தான். சம்பாதிக்க பல ஆயிரம் மைல்கள் செல்வதெல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை. நம்மூர் இளைஞர்கள் ஒரு நகராட்சியில் இருந்து வேறு நகராட்சிக்கு பணியிடமாற்றம் செய்தால்போதும் அங்கு போக முடியாது எனக்கூறி வேலையே வேண்டாம் என உதறிவிடுபவர்கள் அதிகம். ஆனால் இந்த இனத்தை சேர்ந்த மக்கள், எங்குமே போய் எனக்கு வேலை கொடு என கேட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. படித்து முன்னேறிய இளைய தலைமுறையினர் ஓரிருவர் மட்டும் தற்போது அரசு பணிகளுக்குச் சென்றுள்ளனர். இனி வரும் காலங்களில் அரசு பணிகளில் சேருவதை தங்களது இலக்காக மாற்றிக்கொண்டார்கள் என்றால், அதிலும் சாதித்தே காட்டுவர்கள்.
இவர்கள் எந்த கோயிலிலும் சென்று வரிசையில் நின்று சாமி கும்பிட்டதே இல்லை. ஆனால் இவர்கள் வியாபாரம் செய்யாத கோயில்கள் என எதுவுமே இல்லை. அந்த அளவு இவர்கள் வாழ்க்கை வியாபாரத்துடன் இணைந்துள்ளது. இவர்கள் கடவுளை நம்புவதை விட தங்களின் உழைப்பை நம்பும் அற்புத குணம் கொண்ட மக்கள். இந்த கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் தீர்ப்பு சொல்லுங்கள். இவர்களுக்கு கோயில் அன்னதானத்தில் சாப்பிட உரிமை உண்டா இல்லையா என்பதை. நிச்சயம் இப்படி ஒரு தன்னம்பிக்கை மிகுந்த இன மக்களை வாழ்த்தி வரவேற்பது தான் சமூக நீதி சமதர்ம சமூகத்தின் சிறந்த அடையாளம் என்பதை உணர்ந்த தமிழக மக்கள், சமூக வலைதளங்களில் இவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து அரசாங்கத்தை தட்டி எழுப்பி உள்ளனர். இதனை தமிழக அரசும் புரிந்து நடந்து கொண்டது . காரணம் இந்த அரசை வழிநடத்தும் இயக்கத்தின் பாரம்பரிய கோட்பாட்டை வெளிப்படுத்தியது எனலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu