தேனியில் அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு சவால் விட்ட பா.ஜ.க.,
தேனியில் நேற்று இரவு நடந்த பா.ஜ., சாதனை விளக்க கூட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஜெயலலிதாவிற்கு கூடிய கூட்டத்தை இதுவரை எந்த அரசியல் கட்சியாலும் கூட்ட முடியவில்லை. ஜெ., இறந்த பிறகு தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க., நடத்திய கூட்டம் எதிலும் பெரிய அளவில் தொண்டர்கள் கூடவில்லை என்றே கூற முடியும்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தி.மு.க., இரண்டு கூட்டங்களை நடத்தியது. தங்க.தமிழ்செல்வன் தி.மு.க.,வில் இணையும் விழா, ஸ்டாலின் மக்களை கிராமங்களில் சந்திக்கும் விழா. இந்த இரண்டு விழாக்களிலும் கூடிய கூட்டமே வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை பிடிக்கும் என்ற மாயையை அப்போதே உருவாக்கியது. அதேபோல் மூன்று சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க.,வே வென்றது. போடியில் கூட பெரும் இழுபறிக்கு பின்னர் ஓ.பி.எஸ்., வென்றார்.
இப்போது காற்று திசைமாறி வீசுகிறதோ என்று உளவுத்துறை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பா.ஜ., தலைவர் அண்ணாமலை தேனிக்கு வந்த போது பெரும் அளவில் கூட்டம் கூடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நேற்று பா.ஜ., நடத்திய 8ம் ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹைச்.ராஜா பங்கேற்றார்.
இவருக்கு கூடிய கூட்டம் தேனியை திணறடித்து விட்டது என்று போலீஸ் நிர்வாகமே ஒப்புக்கொள்கிறது. அதாவது கட்சி தலைவர்களை தவிர்த்து வரும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு கூடும் கூட்டங்களில் திராவிட கட்சிகளை மிஞ்சி பா.ஜ.,வினர் கூட்டம் சேர்த்து விட்டனர். வரும் 28ம் தேதி அக்கட்சி தலைவர் அண்ணாமலை தேனிக்கு வருகிறார். அப்போது ஜெ.,க்கு கூட்டம் சேர்ந்தது போல் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் என அக்கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால் குறைந்தபட்சம் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு பா.ஜ., சவால் விடும் என்றே உளவுத்துறை போலீசார் கணித்துள்ளனர். எப்படியிருந்தாலும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடக்கூட வேட்பாளர் இல்லை என்ற நிலையில் இருந்த பா.ஜ., மிக குறுகிய காலத்தில் கூட்டம் சேர்ப்பதில் தி.மு.க.,விற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu