உள்நாட்டிலும் ஜவுளி விற்பனை டல்: ஸ்பின்னிங் மில்களுக்கு விடுமுறை

உள்நாட்டிலும் ஜவுளி விற்பனை டல்:  ஸ்பின்னிங் மில்களுக்கு விடுமுறை
X

பைல் படம்

Textile News Today -உலகம் முழுவதும் ஜவுளி விற்பனையில் ஏற்பட்ட தொய்வால் உள்நாட்டிலும் விற்பனை குறைந்து பல லட்சம் கோடி ஜவுளிகள் தேங்கி உள்ளன

Textile News Today - கொரோனா பேரிடர், ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூட கடுமையான பொருளாதாரச் சரிவை சந்தித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. அதேபோல் உயர்தட்டு மக்களின் பொருளாதாரம் மீண்டு பழைய நிலையை விட சிறப்பாகவே உள்ளது.

ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் (இதில் கூட முதல் தர நடுத்தர வர்க்கம், இரண்டாம் தர நடுத்தர வர்க்கம், மூன்றாம் தர நடுத்தர வர்க்கம், அதாவது ஹையர் மிடில் கிளாஸ், மிடில் கிளாஸ் லோயர் மிடில் கிளாஸ் என மூன்று வர்க்கம்) பொருளாதார சூழல் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை.

இந்தியாவின் ஜவுளித்துறை உலக அளவில் அதிகம் பேர் வேலை பார்க்கும் ஜவுளித்துறை ஆகும். இந்த துறையில் விவசாயம் முதல் விற்பனை வரை அதாவது பருத்தி விதைப்பது முதல் பருத்தி எடுப்பது, பஞ்சாக மாற்றுவது, நுாலாக மாற்றுவது, துணியாக மாற்றுவது, டெய்லரிங், விற்பனை என கணக்கிட்டால் இத்துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மட்டும், இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 6 கோடியை எட்டும். அந்த அளவு அதிகம் பேர் பணிபுரியும் மிகப்பெரிய துறை தொழில்துறை இந்த ஜவுளித்துறை. (விவசாயம், மீன்வளம் தொழில் துறையாக கணக்கில் எடுக்கப்படவில்லை. அது அத்தியாவசிய சேவைத்துறையில் சேர்ந்து விட்டது).இத்தனை கோடிப்பேருக்கு வாழ்வளிக்கும் ஜவுளித்துறை தான் தற்போது இக்கட்டில் உள்ளது.

இது குறித்து தேனி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே.நடேசன் கூறியதாவது: உலக அளவில் கடந்த ஆண்டு பருத்தி விளைச்சல் வீழ்ச்சி அடைந்ததால், பஞ்சு விலை ஒரு கண்டி ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை எட்டியது. இவ்வளவு விலை கொடுத்து பருத்தி வாங்கிய ஸ்பின்னிங் மில்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் நுால் விலையும், துணிகளின் விலையும் உயர்ந்தது.

ஒரு பக்கம் விலை உயர்வு, மறுபக்கம் மக்களின் வாங்கும் சக்தி சரிவு. இந்த இடைவெளியினை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்திய மில்கள் அனைத்தும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகள், கிழக்கு ஆசியா நாடுகளுக்கு அதிகளவில் ஜவுளி ஏற்றுமதி செய்கின்றன. இந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை, கடுமையான பணவீக்கம் நிலவுகிறது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனது. ஏறத்தாழ இந்தியாவிலும் இதே நிலை தான். நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் கொரோனா பாதிப்பிற்கு பின்னர் இன்னும் பொருளாதார மீட்சி பெறவில்லை.

தற்போது வடஇந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இது போன்ற நேரங்களில் ஜவுளி விற்பனை களைகட்டுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்தை விட பாதியளவு கூட ஜவுளி விற்கவில்லை. உலகின் மிகப்பெரிய திருவிழா மற்றும் அதிக மக்கள் ஒரே நேரத்தில் கொண்டாடும் தீபாவளி திருநாளிற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மொத்த வியாபாரிகள் இன்னும் ஜவுளி கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் உள்நாட்டில் ஜவுளி விலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்துள்ள நிலையில் ஜவுளிகளை கொள்முதல் செய்து, விற்பனையாகா விட்டால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜவுளி வியாபாரிகள் உள்ளனர்.

வெளிநாட்டு, உள்நாட்டு விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த மார்க்கெட்டுகளிலும், மில்களிலும் தற்போது தேங்கி கிடக்கும் ஜவுளிகளின் மதிப்பு மட்டும் பல லட்சம் கோடி ரூபாயை எட்டும். தயாரித்த ஜவுளிகளையே விற்க முடியவி்ல்லை என்பதால் பல மில்கள் ஜவுளி புதிய தயாரிப்புகளை குறைத்து விட்டன அல்லது நிறுத்தி உள்ளன.

இதனால் நுால் மார்க்கெட் டல்லடித்து, வாரத்தின் ஏழு நாட்களும் மூன்று ஷிப்ட்களும் இயங்கி வந்த ஸ்பின்னிங் மில்களுக்கு தற்போது வாரம் இரண்டு நாள் வீதம் மாதம் 8 முதல் 10 நாள் விடுமுறை விடுகின்றனர். சில மில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சில மில்கள் 15 நாட்கள் கூட விடுமுறை விட்டுள்ளன. திருப்பூரிலேயே பெரும் தேக்கம் காணப்படுகிறது. நாடு முழுவதும் ஜவுளித்துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. அரசு இந்த சமயத்தில் ஜவுளித்துறைக்கு உதவி செய்ய வேண்டும். மில்களுக்கு வங்கிகள் மூலம் உதவி செய்ய வேண்டும் என்றார் அவர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai tools for education