மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கோயில்கள்?
திருப்பதி கோயில்.(கோப்பு படம்)
தேனி மாவட்ட பாஜக.,வினர் கூறியதாவது:
திருப்பதி சீனிவாசப்பெருமாளை இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் கொண்டாடுகின்றனர். சராசரியாக இந்த கோயிலுக்கு தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் இங்கு லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் மாட்டுக்கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற தரமற்ற பொருட்கள் கலந்து சப்ளை செய்யப்பட்டதாக எழுந்த தகவல்களும், அதனை தொடர்ந்து நடந்து வரும் சர்ச்சைகளும் இந்தியா முழுவதும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது. சனாதன தர்மத்தின் படி வாழும், இந்துக்கள் அத்தனை பேரும் மனம் புண்படும்படி இந்த சம்பவம் நடந்துள்ளது.
கோயில் நிர்வாகத்தில் மாற்று மதத்தினர் புகுந்துள்ளதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் மூலம் தெரியவருகிறது. சனாதன தர்மத்தின் மீதும், இந்து மதத்தின் மீதும், ஆகம விதிகளின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களை இந்து கோயில் நிர்வாகத்தில் கொண்டு வந்ததால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. திருப்பதி லட்டு கலப்படத்தில் நடந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்திலும் பழனி உட்பட பல்வேறு முக்கிய கோயில் நிர்வாகத்தில் மாற்று மதத்தினர் புகுத்தப்பட்டு உள்ளனர். பழனி கோயில் பஞ்சாமிர்த பிரசாதத்தையும், அதற்கு வழங்கப்படும் மூலப்பொருட்களையும் பரிசோதிக்க வேண்டும் என்று சில நாட்களாக கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அதனை யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.
இது போன்ற சிக்கல்களை தீர்க்க ஒரே வழி, இந்து கோயில் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் சனாதன தர்மம், இந்து தர்மத்தையும், இந்துகோயில்களையும் நிர்வகிக்க, இந்து மத பெரியவர்களை கொண்ட கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும்.
இந்த குழுவின் கட்டுப்பாட்டில் மாநில அளவிலும் குழு அமைக்க வேண்டும். இந்த குழுவின் கட்டுப்பாட்டில் இந்துக் கோயில்களை ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு நேரடியாக இந்து குழு நிர்வாகத்தை கவனிக்க வேண்டும். இது ஒட்டுமொத்த இந்து மக்களின் கோரிக்கையாகும். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu