கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை   இடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

தேனி மாவட்டம், கோம்பையில் கோயிலை இடிக்க கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கோம்பை -பண்ணைப்புரம் சாலையில் அருந்ததியர் சமூக்திற்கு சொந்தமான மதுரை வீரன் ,கருப்பசாமி கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமூகத்தினர் இங்கு குல தெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயில் அமைந்திருப்பது கோம்பை ஜமீன்தார் கொடுத்த இடமாகும். இந்நிலையில் இக்கோயிலுக்கு பின்புறம் சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதற்கான 12 அடி பாதையும் கோயிலின் கீழ்புறம் இருக்கிறது.

தற்போது இந்நிலம் அருகில் உள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர், தனது சொந்த நலனுக்காக குறுக்கு வழியில் கோயிலை அப்புறப்படுத்த முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்காக கடந்தாண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தனது நிலத்திற்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என கூறி உண்மைக்கு புறம்பாக கோயில் என்ற தகவலை கூறாமல் ஆக்கிரமிப்பு அகற்ற ஆணை பெற்றுள்ளார்.

அந்த ஆணையை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்ற முயற்சி செய்த போது அப்பகுதி அருந்ததியர் இன மக்கள் ஒன்றுதிரண்டு தடுத்தனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை நீதிமன்றம் சென்று தடையாணை பெறுங்கள் அதுவரை கால அவகாசம் தருகிறோம் என்றனர். அதன்பின் அருந்ததியின மக்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிமன்றம் கள ஆய்வு செய்து உண்மை விபரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் என வழிகாட்டியது. ஆனால் அதற்கு பின்னர் கூட நில உரிமையளாருக்கு ஆதரவாகவே நேர்மையற்ற முறையில் நெடுஞ்சாலைத்துறை செயல்பட்டு அருந்ததியின மக்கள் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள சம்மதித்து விட்டார்கள் என்று எவ்வித கள ஆய்வும் செய்யாமல் அறிக்கையை நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்து விட்டு ஆக்கிரமிப்பை அகற்ற ஆணையை பெற்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 23 ம்தேதி கோயிலை இடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் நெடுஞ்சாலைத்துறை செய்து இருந்த தகவல் அறிந்து சிபிஎம் பாளையம் ஏரியா கமிட்டி தலைவர்கள் நெடுஞ்சாலைத்துறையினரை சந்தித்து கோயிலை இடிக்க அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தி விட்டு வந்தனர். அதன் பின் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். விசாரணையில் இக்கோயிலின் உண்மை விபரங்களை கூறியபோது நீதிமன்றம் தற்காலிகமாக பழைய நிலையே தொடரட்டும் என்பதோடு வழக்கையும் ஒத்தி வைத்துள்ளார்கள்.

இச்சூழ்நிலையில் தான் அருந்ததியின மக்களின் 300 ஆண்டுகால வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், சட்டவிரோதமாக கோயிலை இடிக்கக் கூடாது என வலியுறுத்தியும் கோம்பையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஏரியாக்குழு உறுப்பினர் டி.கே. சீனிவாசன், அருந்ததியர் சமூக தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டசெயற்குழூ உறுப்பினர்கள் எம்.இராமச்சந்திரன், ஜி.எம்.நாகராஜன், மாநில குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் இப்ராஹிம், பாளையம் இடைகமிட்டி பொறுப்பு செயலாளர் எஸ்.லட்சுமணன் ஆகியோர் பேசினர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி