வாத்தி திரைப்படத்தை தடை செய்ய ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
அறிவு ஆசான்களை அவமதிக்கும் "வாத்தி" திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
உலகத் தமிழாசிரியர் பேரவையின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான ந.ரெங்கராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆசிரியப் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற உணர்வோடு ஆசிரியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பெற்றோர்களும், பொதுமக்களும் ஆசிரியர்களின் தன்னலம் பாராத கற்பித்தல் பணியை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை சமூகத்தில் மிகுந்த மரியாதைக்குரியவர்களாகவே நடத்தி வருகிறார்கள்.
கற்பித்தல் பணி மேற்கொள்பவர்கள் என்பதைத் தாண்டி, தங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கு, சமூகத்தின் நலனுக்கு ஒரு நல்ல ஆலோசகர்களாகவே ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள். இதனால் தான் ஆட்சிக்கட்டிலாக இருந்தாலும் ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்களால் மட்டுமே அதனை அலங்கரிக்க முடிகிறது.
இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் "வாத்தி" என்ற சொல்லை பயன்படுத்தி ஒரு சினிமா தயாரிக்கப்படுகிறது. பாராட்டப்பட வேண்டிய, போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஆசிரியர் சமூகத்தை எள்ளி நகையாடும் வகையில் திரைப்படத்திற்கு பெயர் வைப்பது ஆரோக்கியமான போக்கல்ல. இந்தப் படம் தொடங்கப்பட்ட செய்தி அறிந்த உடனேயே படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என கூட்டணியின் சார்பில் படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்தோம்.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அதே பெயரிலேயே படத்தை வெளியிட திரைப்பட தயாரிப்புக் குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆசிரியர்களை எள்ளி நகையாடி அதன் மூலம் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர். இது அவர்களை பரிதாபத்துக்குரியவர்களாகவே ஆக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பெயரில் திரைப்படம் வெளியிட தணிக்கை குழுவினர் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை? அதே பெயரில் இப்படம் வெளிவருமேயானால் ஆசிரியர்களை எள்ளி நகையாட மட்டுமே இச்சொல் பயன்படும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு, படக்குழுவினரை அழைத்துப் பேசி, படத்தின் தலைப்பை மாற்றிட செய்ய வேண்டும். அதனை ஏற்காத பட்சத்தில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவைகளை எல்லாம் தாண்டி இப்படம் அதே பெயரில் வெளிவருமேயானால் ஆசிரியர்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும்.
அறிவையும் ஆற்றலையும் அள்ளித்தரும் ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் இப்படம் வெளியிடப்படுகிறது என்பதை மாணவர்கள், பெற்றோர்கள் மூலம் அனைத்து தரப்பினருக்கும் விளக்கி இப்படத்தை புறக்கணிக்க செய்திட வேண்டும். நமது சக்தி என்ன என்பதை இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் இதுதான் அவர்களுக்கு பதில் என்று உணர்த்தும் வகையில் ஆசிரியர்களின் பிரச்சாரம் அமைய வேண்டும் என்பதையும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu