ஆள்குறைப்பு நடவடிக்கை இல்லை: டிசிஎஸ் அறிவிப்பு
ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என்று நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் அறிவித்துள்ளது.
‘ஸ்டார்டப் அப்’ நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை மூலம் வேலை இழந்தவா்களுக்கு தங்கள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. சா்வதேச அளவில் எதிர்கால பொருளாதார சூழல் நிச்சயமற்றதாக உள்ளது என்று காரணம் கூறி உலக அளவில் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சா்வதேச அளவில் பிரபலமான கூகுள், ட்விட்டா், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களும் தீவிரமான ஆள்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இது தகவல் தொழில்நுட்பத் துறையில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விஷயத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடா்பாக அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரி மிலிந்த் லக்காத் கூறியதாவது: டிசிஎஸ் நிறுவனம் ஆள் குறைப்பில் ஈடுபடப்போவதில்லை. நிறுவனத்தின் பணியாளா்களைத் தக்கவைத்து அவா்களின் திறமையை மேம்படுத்தவே விரும்புகிறோம். டிசிஎஸ் நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் மேல் பணியாளா்கள் உள்ளனா். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஊதிய உயா்வு வழங்கப்படும்.
கல்வித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் செயல்படும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கையால் வேலை இழப்பவா்களுக்கு எங்கள் நிறுவனத்தின் வாய்ப்பு வழங்கப்படும். முக்கியமாக வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு, ‘க்ளவுட்’ தொழில்நுட்பத்தில் சிறந்தவா்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. நிறுவனத்துக்காக நோ்மையாகவும், சிறப்பாகவும் உழைப்பவா்களுக்கு டிசிஎஸ் எப்போதும் முக்கியப் பொறுப்புகளை வழங்கி வருகிறது. அமெரிக்காவில் பணிவாய்ப்பு இழக்கும் இந்திய வம்சாவளியினருக்கு பணி வாய்ப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu