கேரளாவில் உள்ள தலைவர்களில் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்
பைல் படம்
CPI in Kerala -மென்மையான அரசியலுக்காக புகழப்படும் இந்த கானம், முல்லைப் பெரியாறு அணைக்கெதிராக எவ்வித அரசியலையும் முன்னெடுக்காத ஒரு அரசியல்வாதி. முல்லைப் பெரியாறு அணைக்கெதிராக சண்டமாருதம் முழங்கிய பீருமேடு முன்னாள் எம் எல் ஏ பிஜுமோளை, மாநில குழுவில் இருந்தே துடைத்தெறிந்ததார் இந்த கானம் ராஜேந்திரன்.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட எவரும் கட்சியில் இப்போது இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்ட உறவை பேணுவதில் கானம் முக்கியத்துவம் பெற்ற ஒரு அரசியல்வாதி என்பது பலருடைய பொதுவான கருத்து.
சிறுவயதில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான கானத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாழூருக்கு, நடந்து சென்று கல்வி பயின்ற தோழர் கானத்தின் தகப்பனார் ஒரு தேயிலைத் தோட்டத்தின் மேனேஜர். தேயிலை தோட்ட தொழிலாளிகளை பார்த்து தான் அவர் வளர்ந்தார்.
கானம் ராஜேந்திரனின் அரசியல் பயணம் 19 வயதிலிருந்தே உயர்ந்து கொண்டே வந்தது. கானத்தின் அரசியல் பயணம், 1969 ஆம் ஆண்டு அவரது 19 வது வயதில் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்த சி.கே. சந்திரப்பன் அதன் தேசியத் தலைவராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் ஏ ஐ ஒய் எஃப் மாநிலத் தலைவராக கனியாபுரம் ராமச்சந்திரன் இருந்தார். அப்போதுதான் கானத்தின் பயணம் தீவிரம் எடுத்தது.
1972 காலகட்டத்தில், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 வயதில் கானம், அதாவது 1975 ல் CPIன் கேரள மாநிலச் செயலர் உறுப்பினரானார். கடந்த 47 ஆண்டுகளாக CPI ன் மாநிலக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டயம் மாவட்டச் செயலாளராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். 2015 ல், கானம் கட்சியின் மாநில செயலாளராகவும், மத்திய செயலக உறுப்பினராகவும் ஆனார். 1982 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில்,வாழூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து கேரள சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனது திறமையை நிரூபித்தார்.
கேரளஅரசியலில் பெரிய ஜாம்பவான்களாக கருதப்பட்ட,எம்.கே.ஜோசப்பை 1982 சட்டமன்ற தேர்தலிலும், பி.சி.தாமசை 1987 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.
1991 ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் தொடர்ச்சியாக மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையும் தழுவினார். ஆனாலும் மனம் தளராத கானம் தொடர்ச்சியாக கட்சியில் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொண்டே வந்தார். சிபிஐ தலைமையிலான தொழிற்சங்கமான ஏஐடியுசி யின் செயல்பாடுகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார். பி பாலச்சந்திரமேனன், டி.வி.தாமஸ், பி.பாஸ்கரன், கல்லாட் கிருஷ்ணன் மற்றும் கே.பி.பிரபாகரன் போன்ற சிபிஐ பிரமுகர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
இப்படியாக பல ஏற்ற இறக்கங்கள் கொண்ட கானத்தின் அரசியல் பயணத்தில், கடந்த பத்து நாட்கள் மிக மிக முக்கியமானது. கேரள அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட, இஸ்மாயிலையும் திவாகரனையும் அவர் எதிர்கொண்ட விதம் அலாதியானது.
பி.கே. வாசுதேவன் நாயர் கேரள மாநிலச்செயலாளராக இருந்தபோது, வெளியம் பார்க்கவனுடன் இஸ்மாயில் அந்த கட்சியின் மாநில துணைச் செயலாளர். கூடுதலாக இ. கே.நாயனார் அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவும் இருந்தார். கட்சியின் கடைக்குட்டியும் இஸ்மாயீலை அறியும்.
அதுபோல சி. திவாகரன். தத்துவ பின்னணிக்கு பெயர் பெற்றவர். எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாத முதுபெரும் அரசியல்வாதி. 75 வயதை தாண்டிய இருவரும், கானத்தின் மீது நடத்திய தாக்குதல்கள், கேரள அரசியலில் அழிக்க முடியாத சுவரெழுத்துகள்.
ஒரு கட்டத்தில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்சியில் மாநில பொறுப்பு இல்லை என்கிற நிலையில், இருவரும் இணைந்து கானத்திற்கு எதிராக இளம் தலைவரான பிரகாஷ் பாபுவை முன்னிறுத்திய போது, கானம் சற்று ஆடித்தான் போனார். களத்தை இழந்தாலும் யுத்தத்தை இழக்கவில்லை என்பது போல இருந்தது கானத்தின் எதிர் நடவடிக்கைகள்.
பிஜுமோள், புனலூர் ராஜு ஆகியோர் ஒரு கட்டத்தில் இஸ்மாயிலுடன் இணைந்து கொள்ள, மனம் தளராத கானம், மென்மையான தனது அணுகுமுறை மூலம் அனைவரையும் ஒரு கட்டத்தில் வென்று, வெளியேற்றவும் செய்தார்.
தேசிய செயலாளர் டி ராஜாவின் மனைவியும், கேரள அரசியல்வாதியமான ஆன்னி ராஜாவுடன் கானத்திற்கு ஏற்பட்ட கருத்து மோதலால், மாநாட்டிற்கு அவரை அழைக்காமல் தவிர்த்த தைரியம் கானத்திற்கு மட்டுமே வரும். எந்த இஸ்மாயில் தனக்கு எதிராக களத்தில் நின்றாரோ அதே இஸ்மாயிலை தன்னை மாநிலச் செயலாளராக முன்மொழிய வைத்து, அவரை செல்லாக்காசாக்கினார். தன் பால்ய கால சகாவான இஸ்மாயிலை மறைமுகமாக ஆதரித்த முன்னாள் மாநிலச் செயலாளர் பன்னியன் ரவீந்திரனை வழிமொழியச் செய்து, அவரையும் களத்தில் இருந்தே அப்புறப்படுத்தினார்.
இனிவரும் காலங்களில் எழுத்து, வாசிப்பு, கலாசார செயல்பாடுகளை தொடர விரும்புவதாக கூறி சி.திவாகரன் பொதுவெளியில் அறிவித்து நடையை கட்டினார். இத்தனைக்கும் அவர்கள் யாரிடமும் என்னை வெட்டுவதற்கு கக்தி இல்லை என்று களத்தில் நின்றவர் இந்த திவாகரன். பிஜுமோளையும், புனலூர் ராஜுவையும் மாநாட்டில் இருந்தே வெளியேற வைத்த ராஜதந்திரம் கானத்தினுடையது.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிந்தன் மாஸ்டர், ஒரு தீவிர போக்கு கொண்ட அரசியல்வாதி, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் கம்பை சுழற்றுவார் என்கிற நிலையில் கானம் ராஜேந்திரன் முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார் என பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu