மிரட்டும் மௌனம்... அலறும் மீடியாக்கள்.... பரிதவிக்கும் கேரள உளவுத்துறை...

முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் எங்களின் மௌனமே கேரளாவிற்கு பரிதவிப்பினை கொடுத்துள்ளது என தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர்
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: சமீபகாலமாக நாங்கள் முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னை பற்றி பேசவில்லை என்பது உண்மை தான். திட்டமிட்டே வெளியில் பேசுவதை குறைத்துக் கொண்டோம். எங்களை கண்காணிக்கவே சில உளவுத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேலும் பலரை தமிழகத்திற்குள்ளேயே உளவாளிகளாக நியமித்தும் உள்ளனர். இது பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியும். நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை எங்கள் தனிப்பட்ட சங்க குழுவில் பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த பதிவு எங்கள் சங்க உறுப்பினர்களை சென்றடையும் முன்னர், கேரளா முழுவதும் சென்று விடுகிறது. அந்த அளவு கேரள உளவுத்துறையும், கேரள மீடியாக்களும் எங்களை கண்காணிக்கின்றனர்.
எங்களைப் பற்றியும், எங்கள் பலத்தை பற்றியும் கேரளா நன்கு புரிந்துள்ளது. தமிழக அரசும், தமிழக அதிகாரிகளும் எங்களுக்கு அளப்பரிய ஆதரவு வழங்கி வருகின்றனர். இதனால் எங்களின் முல்லைப்பெரியாறு அணை பற்றிய எங்கள் வியூகத்தில் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. மாறாக பேசுவதை குறைத்துக் கொண்டு, விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. நாங்கள் பேசுவதை குறைத்துள்ளதால், என்ன செய்கிறோம் என்பது கேரளாவிற்கு தெரியவில்லை. இதனால் அவர்களிடம் பதற்றம் அதிகரித்துள்ளது.
எங்களை பேச வைக்கவே கேரள பத்திரிக்கைகள் எங்களைப் பற்றி தவறாக எழுதுகின்றன. மிகவும் மோசமாக சித்தரிக்கின்றன. அதுபற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட நேரமில்லை. எங்களுக்கு அதிகப்படியான வேலை உள்ளது. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்து முடித்து விட்டோம். எங்கள் பாதையில் நாங்கள் திட்டமிட்டு பயணிக்கிறோம். இந்த வழக்கு பற்றிய விவரங்களை அறிய கேரளா படாதபாடு படுகிறது.
எப்படியும் வழக்கு நடக்கும் போது எல்லாம் தெரிந்து விடுமே. அதற்குள் என்ன அவசரம். நாங்கள் எங்கள் உரிமைக்காக வழக்கு போடுவதை கூட இவர்கள் உளவு பார்க்கின்றனர். இவர்களின் உளவுப்பார்வையில் இருந்து தப்ப நாங்கள் திட்டமிட்டே மவுனம் சாதிக்க வேண்டி உள்ளது. இதனால் எங்களை தோற்று விட்டனர் என கிண்டல் செய்கின்றனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். எங்கள் பாதையில் நாங்கள் மிகத்தெளிவாகவே பயணிக்கிறோம். எங்கள் போராட்ட திட்டங்களிலோ, அடுத்தடுத்த போராட்ட பயண திட்டங்களிலோ எந்த மாற்றமும் இல்லை என்றார் அன்வர் பாலசிங்கம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu