முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தோற்கடிக்கப்படும் தமிழகம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தோற்கடிக்கப்படும் தமிழகம்
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திட்டமிட்டு தமிழகம் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளருமான ச. பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று காலை 10 மணிக்கு புது தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் 18-வது முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையை 12 மாதங்களுக்குள் விரிவான மதிப்பீட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ராகேஷ் காஷ்யப் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். மணிவாசன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் பொறியாளர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேரளாவின் சார்பில் முதன்மை செயலாளர் டாக்டர் பி. அசோக், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் முதன்மை பொறியாளர் பிரியேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தான் மேற்கண்ட முடிவு கட்டப்பட்டிருக்கிறது.

எப்படியாவது முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட வேண்டும் என்று கேரளாவில் உள்ள சமூகவிரோதிகள், தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டியதன் அடிப்படையில் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

அணைகள் பாதுகாப்புச் சட்டம் 2021 பிரிவு 38 இன் படி, அணை உரிமையாளரான தமிழகத்திற்கு, முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆய்வுகளை செய்ய அதிகாரம் இருக்கும் நிலையில், கேரளாவால் அது தொடர்ந்து தடுக்கப்பட்டு வந்த விவரங்களை, உச்ச நீதிமன்றமும், மத்திய நீர்வள ஆணையமும் கருத்தில் கொள்ளவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

2021 அணைகள் பாதுகாப்பு சட்டப்படி, வரும் 2026 டிசம்பர் 31 ஆம் தேதி வரை ,கால அவகாசம் இருக்கும் நிலையில் எதற்காக மத்திய நீர்வள ஆணையம் இந்த முடிவை எடுத்தது என்பது நமக்குத் தெரியவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்பு, நிலநடுக்கத்தை தாங்கும் திறன், அதன் உறுதித் தன்மை, வெள்ள பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து திறன் வாய்ந்த பொறியியல் வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் மத்திய நீர்வள ஆணையம், எதை நோக்கி நகர்கிறது என்று நமக்குத் தெரியவில்லை.

தொடுபுழா சட்டமன்ற உறுப்பினரும், கேரள காங்கிரஸ்(ஜோ) தலைவருமான பி.ஜே. ஜோசப்பின் மருமகனும் எர்ணாகுளத்தை சேர்ந்த வருமான டாக்டர் ஜோ ஜோசப், கடந்த 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு துரதிஷ்டவசமானது.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அணை ஒப்பந்தம் தொடர்பான அத்தனை ஆவணங்களையும் இரண்டு மாநில அரசுகளும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கும் நிலை ஒருபுறம்,

அக்டோபர் ஒன்றாம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை தன்வசம் எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடு மறுபுறம், இதற்கிடையில் 12 மாதங்களுக்குள் அணையை விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவித்திருக்கும் மத்திய நீர்வள ஆணையத்தின் அறிவிப்பு என மும்முனை தாக்குதலில் சிக்கி சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது ஒரு கோடி பேரின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை.

2014 மே 7 ம் தேதி நீதியரசர்கள் 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கொடுத்த தீர்ப்பை, எந்த நிலையிலும் அமல்படுத்த விடாத கேரளாவை நோக்கி தன்னுடைய கரங்களை உயர்த்தாத உச்சநீதிமன்றமும்,மத்திய நீர்வள ஆணையமும், எந்த அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையை விரிவான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறுகிறது என்று எனக்கு தெரியவில்லை.

2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தால்கொடுக்கப்பட்ட தீர்ப்புகளை செயல்படுத்த விட்டிருந்தாலே முல்லைப் பெரியாறு அணை கூடுதல் பொலிவு பெற்று இருக்கும் என்கிற நிலையில், எதற்காக அது குறித்து எந்த கேள்வியையும் உச்ச நீதிமன்றமும், மத்திய நீர்வள ஆணையமும் எழுப்பவில்லை.

அணைகளின் பாதுகாப்பு கொள்கை உருவாக்கம் மற்றும் பரிந்துரைக்கும் அமைப்பான அணை பாதுகாப்புக்கான தேசிய குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் மற்றும் தான் கொடுத்த தீர்ப்பையே அமல்படுத்த உத்தரவிடாத உச்ச நீதிமன்றம் என அனைத்தும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக இருப்பது தான் உச்சகட்ட கொடுமை.

அடுத்தடுத்த நாட்களில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான சக்திகள் இன்னும் வேகம் எடுக்க கூடும்.கேரளாவில் உள்ள மத்திய மாவட்டங்களில் நேற்றே சமூக வலைதளங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வரும் நாட்களில் உற்சாக மிகுதியால் அணையை நோக்கி கூட அவர்கள் வரக்கூடும். எது வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் நாங்களும் களத்தில் நிற்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!